விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 13 டிசம்பர், 2021

ஒன்றூக்கல் பெண்டிர் தொழில்நலம் - பாடல்.87 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

---------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (87)

--------------------------------

 

ஒன்றூக்கல் பெண்டிர் தொழில்நலம்என்றும்

நன்றூக்கல் அந்தணர் உள்ளம் பிறனாளும்

நாடூக்கல் மன்னர் தொழில்நலம் கேடூக்கல்

கேளிர் ஒரீஇ விடல்.

 

-----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------------

 

ஒன்று ஊக்கல் பெண்டிர் தொழில் நலம்; - என்றும்

நன்று ஊக்கல் அந்தணர் உள்ளம்; பிறன் ஆளும்

நாடு ஊக்கல் மன்னர் தொழில் நலம்; கேடு ஊக்கல்

கேளிர் ஒரீஇவிடல்.

 

-----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

-----------------------

 

இல்லற வாழ்வில் இணைந்து செயல்படுதல், இல்லத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். எனவே கணவரோடு ஒருமைப்பட்டு நிற்க முயலுதலே பெண்டிர்க்கு நற்செய்கையாகும் !

 

அந்தணர் என்போர் அறவோர்; எனவே அற நினைவுகளை மக்களிடம் இடையறாது எழுப்பிக்கொண்டிருக்க முயலுதலே அந்தணருக்கு அழகு; அவர்களின் அரும்பணியும் அதுவே !

 

ஆள்கின்ற நாட்டின் எல்லையை விரிவுபடுத்துதலே மன்னருக்கு அழகு; எனவே வேற்றார் ஆள்கின்ற நாட்டைக் கைப்பற்றி அங்கும் நல்லாட்சி தர  முயலுதலே மன்னனின் கடமையாகும் !

 

சுற்றத்தாருடன் கூடி வாழ்தல் மனிதனுக்குப் பாதுகாப்பை வலுப்படுத்தும்; பாதுகாப்பு உணர்வை மேம்படுத்தும்; சுற்றத்தாரைச் சுமையாக எண்ணி அவர்களை விலக்கி வாழ முனைதல் கேடுகளுக்கு வழிவகுக்கும் !

 

 

-----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

------------------------------

 

பெண்டிர் = பெண் மக்களின் ; தொழில் நலம் = தொழிற் சிறப்பு ; என்றும் ஒன்று ஊக்கல் = எந்நாளும் தன் கணவரோடு ஒருமைப்பட்டு முயன்று ஒழுகலாம் ; அந்தணர் உள்ளம் = அந்தணரின் கருத்து ; என்றும் நன்று ஊக்கல் = இனிய எண்ணங்களையே முயன்று எழுவித்துக் கொண்டிருத்தலாம் ; மன்னர் = அரசரின் ; தொழில் நலம் = தொழிற் சிறப்பு ; பிறன் ஆளும் = வேற்றரசன் ஆள்கின்ற ; நாடு ஊக்கல் = நாட்டினைக் கைப்பற்றிக் கொள்ள முயன்று ஒழுகுதலாம் ; கேளிர் = சுற்றத்தாரை ; ஒரீஇவிடல் = நீக்கி விடுதல் ; கேடு ஊக்கல் = கேட்டுக்கு முயல்வதாகும்.

 

------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

---------------------------------

 

கணவரோடு ஒருமைப்பட்டு நிற்க முயலுதலே பெண்டிர்க்கு நற்செய்கையாகும் ; அற நினைவுகளை எழுப்பிக்கொண்டிருக்க முயலுதலே அந்தணர் உள்ளத்துக்குச் சிறப்பு ; பிறன் ஆளும் நாட்டை பெற முயலுதலே மன்னர்க்கு உரிய செய்கையாம் ; சுற்றத்தாரை நீக்கி வாழ்தல் கேட்டுக்கு முயலுதலேயாகும்.

 

----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),27]

{13-12-2021}

----------------------------------------------------------------------------------------------