விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத் தமிழறிஞர். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
-----------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (88)
------------------------------
கள்ளாமை வேண்டும் கடிய வருதலால்
தள்ளாமை வேண்டுந் தகுதி யுடையன
நள்ளாமை வேண்டுஞ் சிறியரோடு யார்மாட்டும்
கொள்ளாமை வேண்டும் பகை.
----------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
----------------------------------------------------------------------------------------------
கள்ளாமை வேண்டும் கடிய வருதலால்;
தள்ளாமை வேண்டும் தகுதி உடையன;
நள்ளாமை வேண்டும் சிறியரோடு; யார்மாட்டும்
கொள்ளாமை வேண்டும் பகை.
----------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
----------------------
அறிவுடைமையோடு திட்டமிட்டுச் செய்தாலும், பிறர்
பொருளைத் திருடுவது, வெளியில் தெரியாமற் போகாது. தெரிந்த
பின்பு கொடுந்
துன்பங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்; ஆகையால் எந்த மனிதனும்
களவில் ஈடுபடலாகாது !
நல்ல பழக்க வழக்கங்கள் நமது தகுதியை உயர்த்திக் கொள்வதற்கான
ஏணியாகப் பயன்படும். நாம் வாழ்வில் ஏற்றம் பெற உதவும் ஏணி என்று தெரிந்த பின்பும், நல்ல
பழக்க வழக்கங்களைத் தவிர்க்கலாகாது; அவற்றைப் பின்பற்றலே
பெருமை தரும் !
புல்லறிவு மிக்க சிற்றினத்தாரோடு பொழுதைக் கழித்தலும் அவர்களுடன் நட்புக் கொள்ளுதலும் நமக்கு இழிவைக் கொண்டுவந்து சேர்க்கும்; அவர்களைப்
புறந்தள்ளலே அறிவுடைமையாகும்; கூடா நட்பு கேடாய் முடியும் !
பகையை வளர்த்துக் கொள்ளல், ஒருவனது குலத்தையே வேரறுத்துவிடும்; அறிவுடையோர் யாரிடத்திலும் பகைமை பாராட்டமாட்டார்; பகையை
வளர்ப்பதும் பாம்புக்குப் பால் வார்ப்பதும் ஒன்றே. எனவே
யாரிடத்திலும் பகைமை பாராட்டாதீர் !
-----------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
-----------------------------
கடிய = அஞ்சத் தக்க துன்பங்கள் ; வருதலால் = பின்பு
வருதலால் ; கள்ளாமை வேண்டும் = பிறர்
பொருளைத் திருடாமை வேண்டும் ; தகுதியுடையன = தமக்குத் தகுதியுடைய ஒழுக்கங்களை; தள்ளாமை
வேண்டும் = தவிராமை வேண்டும் ; சிறியாரோடு = சிற்றினத்தாரோடு ; நள்ளாமை
வேண்டும் = நட்புக் கொள்ளாமை வேண்டும் ; யார்மாட்டும் = யாரிடத்திலும் ; பகை = பகையை ; கொள்ளாமை
வேண்டும் = பாராட்டாமை வேண்டும்.
-----------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
--------------------------------
கொடுந்துன்பங்கள் பின்பு உண்டாதலால் என்றும் திருடாமை வேண்டும் ; தகுதியுடைய
ஒழுக்கங்களைத் தவிராமை வேண்டும் ; சிற்றினத்தாரோடு சேராமை வேண்டும் ; யாரிடத்திலும்
பகை கொள்ளாமை வேண்டும்.
-----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”நான்மணிக்கடிகை” வலைப்பூ,
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),27]
{13-12-2021}
---------------------------------------------------------------------------------------------