விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத் தமிழறிஞர். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
---------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (99)
------------------------------
வாலிழையார் முன்னர் வனப்பிலார் பாடிலர்
சாலும் அவைப்படிற் கல்லாதான் பாடிலன்
கற்றான் ஒருவனும் பாடிலனே கல்லாதார்
பேதையார் முன்னர்ப் படின்.
---------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
---------------------------------------------------------------------------------------------
வால் இழையார் முன்னர் வனப்பு இலார் பாடு இலர்;
சாலும் அவைப்படின் கல்லாதான் பாடு இலன்;
கற்றான் ஒருவனும் பாடு இலனே; கல்லாதார்
பேதையார் முன்னர்ப் படின்.
----------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
---------------------
அழகுநிறை பெண்களுக்கு முன்பாகத் தோன்றும் அழகில்லா ஆடவன், பெருமையுடன் பேசப்படுதல் இல்லை !
கற்றறிந்த அறிஞர்கள் அவையின் முன் தோன்றும் கல்லாத மனிதனும், பெருமையாகப்
பேசப்படுதல் இல்லை !
கல்லாத மாந்தர்கள் முன் தோன்றும் கற்றறிந்த ஆன்றோரும், பெருமையாகப்
பேசப்படுதல் இல்லை !
அறிவில்லாத பேதையர் முன்பாகத் தோன்றும் அறிஞனும் பெருமையாகப்
பேசப்படுதல் இல்லை !
-----------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
--------------------------
வால் இழையார் முன்னர் = ஒள்ளிய அணிகலன்களை அணிந்த அழகிய பெண்மக்களுக்கு முன் ; வனப்பு இல்லார் = அழகில்லாத ஆடவர் ; பாடு இலர் = பெருமை இலர் ; சாலும் = கல்வி கேள்விகளால் நிறைந்த ; அவைப்படின் = அவையில் புகுந்தால் ; கல்லாதான் = கல்வியறிவு இல்லதவன் ; பாடு இலன் = பெருமை இல்லாதவன் ஆவான் ; கற்றான் ஒருவனும் = கற்றறிவு உடையான் ஒருவனும் ; கல்லாதார் (முன்னர்ப் படின்) = படியாதவரிடம் சேர்ந்தால் ; பாடு இலனே = பெருமை இலனாவன் ; பேதையார் முன்னர்ப் படின் = அறிவிலார்பாற் சேரினும் ; பாடு இலனே = அறிஞன் பெருமை இலனேயாவன்.
-----------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
------------------------------
அழகிய பெண்டிர்க்கு முன்னர் அழகில்லாத ஆடவர் பெருமை அடைதல்
இல்லை ; கற்றார் அவையில் கல்லாதான் பெருமை அடைதல் இல்லை ; கல்லாதார்
முன்பு கற்றானும் பெருமை அடைதல் இல்லை ; அறிவிலார் முன்பும் அறிஞர்
பெருமை அடைதல் இல்லை.
-----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”நான்மணிக்கடிகை” வலைப்பூ,
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),28]
{14-12-2021}
----------------------------------------------------------------------------------------------