விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத் தமிழறிஞர். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
---------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (100)
--------------------------------
மாசு படினும் மணிதன்சீர் குன்றாதாம்
பூசிக் கொளினும் இரும்பின்கண் மாசொட்டும்
பாசத்துள் இட்டு விளக்கினுங் கீழ்தன்னை
மாசுடைமை காட்டிவிடும்
----------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
-------------------------------------------------------
மாசு படினும் மணி தன் சீர் குன்றாதாம்;
பூசிக் கொளினும் இரும்பின்கன் மாசு ஒட்டும்;
பாசத்துள் இட்டு விளக்கினும் கீழ் தன்னை
மாசு உடைமை காட்டிவிடும்.
-----------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
--------------------
முத்து பவளம் போன்ற ஒளிமணிகளின் மீது அழுக்குப் படிந்தாலும், அவற்றின்
பெருமை ஒருபோதும் குறையவே குறையாது !
எத்துணைதான் கழுவிக் கழுவி எடுத்து வைத்தாலும், இரும்பின்
மீது துரு என்னும் மாசு படிந்து, அதன் மதிப்பைக் குறைத்திடவே செய்கிறது !
கைகளுக்கு விலங்கிட்டுப் பிணித்து ஒறுத்தாலும், கீழ்மக்கள்
தம் கீழ்மைத் தனத்தைக் எப்போதும் காட்டிடவே செய்திடுவர் !
அல்லாமல் அறிவுரை கூறி விளக்கினாலும் அவர்கள் தம் கீழ்மைத்
தனத்தை, கைவிடாமல், வெளிப்படுத்தவே செய்திடுவர் !
----------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
----------------------------
மாசு படினும் = அழுக்குப் பட்டாலும் ; மணி தன் சீர் குன்றாது = நன்மணி தன் பெருமை குன்றாது ; பூசிக்கொளினும் = கழுவி எடுத்துக் கொண்டாலும் ; இரும்பின்கண் = இரும்பினிடத்தில் ; மாசு ஒட்டும் = அழுக்குச் சேரும் ; கீழ்தன்னை = கீழ்மகனை ; பாசத்துள் இடினும் = தளையிட்டு ஒறுத்தாலும் (மாசு உடைமை காட்டிவிடும்) = கீழ்மை இயல்பையே காட்டிவிடுவான் ; விளக்கினும் = அல்லது அறிவு கூறி விளக்கினாலும் ; மாசு உடைமை காட்டிவிடும் = கீழ்மை இயல்பையே கட்டிவிடுவான்.
----------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
-------------------------------
அழுக்குச் சேர்ந்தாலும் நன்மணியின் பெருமை குறையாது ; கழுவி
எடுத்துக்கொண்டாலும் இரும்பின்கண் மாசுண்டாகும் ; கீழ்மக்களை
ஒறுத்தாலும் அவர்கள் தன் கீழ்மைத் தன்மையையே காட்டுவார்கள் ; அன்றி
அறிவு கூறி விளக்கினாலும், அக்கீழ்மையையே காட்டுவார்கள்.
-----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”நான்மணிக்கடிகை” வலைப்பூ,
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),28]
{14-12-2021}
-----------------------------------------------------------------------------------------------