விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 14 டிசம்பர், 2021

ஏரி சிறிதாயின் நீரூரும் - பாடல்.102 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

 

---------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (102)

---------------------------------

ஏரி சிறிதாயின் நீரூரும் இல்லத்து

வாரி சிறிதாயின் பெண்ணூரும் மேலைத்

தவஞ்சிறி தாயின் வினையூரும் ஊரும்

உரன்சிறி தாயின் பகை.

-----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------------

ஏரி சிறிதாயின் நீர் ஊரும்; இல்லத்து

வாரி சிறிதாயின் பெண் ஊரும்; மேலைத்

தவம் சிறிது ஆயின் வினை ஊரும்; ஊரும்

உரன் சிறிதாயின் பகை.

 

----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

---------------------

நீரைத் தேக்கி வைக்கும் குளம் சிறிதாக இருந்தால்நிரம்பிய பின் குளத்து நீர் வழிந்து ஓடும் !

 

குடும்பத்தின் வருவாய் குறைவாக இருந்தால், வாழ்க்கைத் துணைவியும்  வரம்பு கடந்து பேசுவாள் !

 

செய்த நல்வினைகள் சிறிதாக இருந்தால், வாழ்க்கையில் தீவினைகள் விரைவாக  வந்து சூழும் !

 

உடல்வலியும் மனவலியும் சிறிதாக இருந்தால், ஒருவன் பகைவர்களின் பிடிகளுக்குள் நொடியில்  வீழ்வான் !

 

------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

----------------------------

ஏரி சிறிதாயின் = குளம் சிறிதானால் ; நீர் ஊரும் = நீர் வழிந்துவிடும் ; இல்லத்து = வீட்டில் ; வாரி சிறிதாயின் = வருமானம் குறைவானால் ; பெண் ஊரும் = மனையாள் நிலை கடந்து போவாள் ; மேலைத் தவம் சிறிதாயின் = முற்பிறப்பின் நல்வினை குறைவானால் ; வினை ஊரும் = தீவினை பெருகும் ; உரன் சிறிதாயின் = ஒருவன் வலிமை சிறிதானால் ; பகை ஊரும் = பகைவர் வென்றிடுவர்.

-----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------------

ஏரி சிறிதானால் நீர் வழிந்து போய்விடும் ; வீட்டின் வருவாய் குறைவானால் மனையாள் வரம்பு கடந்து பேசுவாள் ; முன்னைத் தவம் சிறிதானால் தீவினை மிகுந்து வருத்தும் ; வலிமை சிறிதானால் பகைவர் மேற்போந்து வென்றிடுவர்.

-----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052,நளி (கார்த்திகை),28]

{14-12-2021}

-----------------------------------------------------------------------------------------------