விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத் தமிழறிஞர். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
----------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (104)
---------------------------------
ஒருவ னறிவானும் எல்லாம் யாதொன்றும்
ஒருவ னறியா தவனும் ஒருவன்
குணன் அடங்கக் குற்றமு ளானும் ஒருவன்
கணன் அடங்கக் கற்றானும் இல்.
-----------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
-----------------------------------------------------------------------------------------------
ஒருவன் அறிவானும் எல்லாம்; யாதொன்றும்
ஒருவன் அறியாதவனும்; ஒருவன்
குணன் அடங்கக் குற்றம் உளானும்; ஒருவன்
கணன் அடங்கக் கற்றானும் இல்.
-----------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
--------------------
எல்லாம் அறிந்தவன் என்று உலகில் எவனுமே இல்லை !
ஒன்றுமே அறியாதவன் என்று உலகில் ஒருவனுமே இல்லை !
குற்றங் குறைகள் மட்டுமே உள்ளவனாக ஒருவனும் இல்லை !
அறியாமை இல்லாத அறிவாளியாக எவனுமே இல்லை !
-----------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
---------------------------
எல்லாம் = எல்லாக் கலைகளையும் ; அறிவான் ஒருவனும் இல் = தெரிந்தவன் ஒருவனும் இல்லை ; யாதொன்றும் = ஒரு சிறிதும் ; அறியாதவன் ஒருவனும் இல் = தெரியாதவன் ஒருவனும் இல்லை ; குணன் அடங்க = ஒரு நல்லியல்பும் இலதாக ; குற்றம் உள்ளான் ஒருவனும் இல் = பிழையே உள்ளவன் ஒருவனும் இல்லை ; கணன் அடங்க = அறியாமை சிறிதும் இலதாக ; கற்றானும் இல் = கற்றறிந்தவனும் இல்லை.
-----------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
--------------------------------
எல்லாம் அறிந்தவனும் இல்லை ; ஒன்றும் அறியாதவனும் இல்லை ; குற்றமே உள்ளவனும் இல்லை ; அறியாமை இல்லாதவனும் இல்லை.
-----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”நான்மணிக்கடிகை” வலைப்பூ
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),28]
{14-12-2021}
-----------------------------------------------------------------------------------------------