விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத் தமிழறிஞர். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
----------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (105)
--------------------------------
மனைக்கு விளக்கம் மடவார் மடவார்
தமக்குத் தகைசால் புதல்வர் மனக்கினிய
காதற் புதல்வர்க்குக் கல்வியே கல்விக்கும்
ஓதிற் புகழ்சால் உணர்வு.
----------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
----------------------------------------------------------------------------------------------
மனைக்கு விளக்கம் மடவார்; மடவார்
தமக்குத் தகைசால் புதல்வர்; மனக்கு
இனிய
காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும்
ஓதின் புகழ் சால் உணர்வு.
------------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
--------------------
வீட்டுக்கு ஒளியாய்த் திகழ்பவள் நல்ல மனைவி !
அம்மனைவிக்கு ஒளியாய்த் திகழ்பவர்கள் நன்மக்கள் !
அம்மக்களுக்கு ஒளியாய்த் திகழ்வது அறிவூட்டும் கல்வி !
அக்கல்விக்கு ஒளியாய்த் திகழ்வது புகழ்சால் மெய்யுணர்வு!
-----------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
----------------------------
மனைக்கு விளக்கம் = வீட்டுக்கு ஒளி ; மடவார் = பெண்கள் ; மடவார் தமக்கு = பெண்களுக்கு ; தகைசால் புதல்வர் = நல்லியல்புகள் நிறைந்த மக்கள் ஒளி ; மனக்கு இனிய = பெற்றோர் மனத்திற்கு இனிமை தரும் ; காதல் புதல்வர்க்கு = அன்பிற்குரிய மக்கட்கு ; கல்வியே = கல்வியறிவே ஒளியாகும் ; கல்விக்கும் = அக் கல்வியறிவிற்கும் ; ஓதின் = சொல்லுமிடத்து ; புகழ் சால் = புகழ் நிறைந்த ; உணர்வு = மெய்யுணர்வே ஒளியாகும்.
-----------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
-----------------------------
மனைக்கு விளக்கம் நன்மனைவி ; நன்மனைவிக்கு விளக்கம் அறிவறிந்த மக்கள் ; அம்மக்கட்கு விளக்கம் கல்வி ; கல்விக்கு விளக்கம் மெய்யுணர்வு.
-----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),27]
{13-12-2021}
-----------------------------------------------------------------------------------------------