விளம்பி
நாகனார் என்னும் பெரும் புலவர் இயற்றிய
நான்மணிக் கடிகை என்னும் நூல் கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய
இலக்கியம். பதினெண் கீழ்க் கணக்கு என்னும் நூற்
பிரிவைச் சார்ந்தது இந்நூல். இதிலிருந்து ஒரு பாடல் !
----------------------------------------------------------------------------------------------
பாடல்: (07).
----------------------
கல்லிற்
பிறக்குங் கதிர்மணி; காதலி
சொல்லிற்
பிறக்கும் உயர்மதம் – மெல்லென்று
அருளிற்
பிறக்கும் அறநெறி; எல்லாம்
பொருளிற்
பிறந்து விடும்.
----------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
------------------------
கண்களைப் பறிக்கும் ஒளிமிகுந்த மணிகள் எல்லாம் கற்களில் (கல் வடிவில்) பிறக்கின்றன !
ஆடவனுக்கு எழுச்சி தரும் வீரம் அவனால் விரும்பப்படும்
காதலியின் சொல்லில் பிறக்கிறது !
மனதில் ஊறும் மென்மையான அருளுணர்வில் பிறக்கின்றன அறம் பொருந்திய நல்வழிகள் !
ஆனால், அவ்வறத்தோடு இன்பம் முதலிய எல்லா நற்பேறுகளும் செல்வத்தினாற் கூடப் பிறக்கின்றன !
------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
-------------------------------
கதிர்மணி = ஒளியுள்ள
மணிகள் ; கல்லிற் பிறக்கும் = மலையில்
உண்டாகும் ; உயர் மதம் = மிக்க
களிப்பு ; காதலி சொல்லிற் பிறக்கும் = காதலியினது
இன்சொல்லினால் தோன்றும் ; அறநெறி = அறவழிகள் ; மெல் என்ற
அருளில் பிறக்கும் = மென்மை பொருந்திய அருளினிடம் உண்டாகும் ; எல்லாம் = அவ்வறதோடு
ஏனைய இன்பம் முதலிய எல்லாமும் ; பொருளில் பிறந்துவிம் = செல்வத்தினால்
உண்டாய்விடும்.
------------------------------------------------------------------------------------------------
கருத்துச் சுருக்கம்:
-----------------------------------
மணிகள் மலையிற் பிறக்கும்; இன்பம் காதலியின் சொல்லிற் பிறக்கும்; அறநெறி அருளிற் பிறக்கும்; ஆனால் அறம், இன்பம் முதலிய எல்லாப் பேறுகளும் செல்வத்தினாலும் உண்டாகும்.
-------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
“நான்மணிக்கடிகை” வலைப்பூ.
[தி.ஆ:2052,நளி(கார்த்திகை),01]
{17-11-2021}
-------------------------------------------------------------------------------------------------