விளம்பிநாகனார் என்னும் பெரும் புலவரால் இயற்றப்பட்ட நூல் நான்மணிக்கடிகை. உலகியல்நெறி
சார் கருத்துகளை ஒவ்வொரு பாடலிலும் எடுத்துரைக்கும் நாகனார், பாடல்
தோறும் நான்கு கருத்துகளை
வலியுறுத்துகிறார். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
------------------------------------------------------------------------------------------------
பாடல் எண்:
(41)
------------------------
கண்டதே செய்பவாங் கம்மியர்; உண்டெனக்
கேட்டதே செய்ப புலனாள்வார்
– வேட்ட
இனியவே செய்ப அமைந்தார்
– முனியாதார்
முன்னிய செய்யுந் திரு.
------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
------------------------------------------
கண்டதே செய்பவாம் கம்மியர்;
உண்டு எனக்
கேட்டதே செய்ப புலன் ஆள்வார்
– வேட்ட
இனியவே செய்ப அமைந்தார்
– முனியாதார்
முன்னிய செய்யும் திரு.
------------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
------------------
கம்மியர் எனப்படும் எந்திரச் சிற்பிகள்,
தாம் கண்ணால்
கண்ட பொருள்களை அதே வடிவில் அப்படியே செய்து
முடிப்பர் !
பயனுடையது எனத் தம் கல்வி கேள்விகளால் தெளிவடைந்த செயல்களை மட்டுமே, தம் அறிவை அடக்கியாளும் பெரியோர் செய்துமுடிப்பர்
!
நல்லியல்புகள் மிக்க சான்றோர்
பிறர் எவற்றை விரும்பினாலும், அவற்றுள் இனிமையானவற்றையே செய்து முடிப்பர்
!
எவரையும் சினவாது அன்பு காட்டும் பெரியோர்கள் தாம் எண்ணியவற்றை
எல்லாம் செய்துமுடிப்பர் !
-----------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
-----------------------
கம்மியர்
= எந்திரச் சிற்பிகள்
(Mechanic); கண்டதே செய்ப
= தாம் கண்ட பொருள்களைப் போன்றவற்றையே செய்வர்;
புலன் ஆள்வார் = அறிவைக் கட்டுப்படுத்தி ஆளவல்ல பேரறிஞர்;
உண்டு எனக் கேட்டதே = பயனுண்டு எனக் கேள்வியால் தெளிந்தவற்றையே;
செய்ப = செய்வர்; அமைந்தார்
= நல்லியல்புகள் அமைந்த சான்றோர்; வேட்ட
= பிறர் விரும்பிய;
இனியவே செய்ப = இனிமையானவற்றையே செய்வர்; திரு = அன்பெனும் செல்வம் மிக்க ; முனியாதார் = யாரையும் சினந்துகொள்ளாத
பெரியோர்கள்; முன்னிய
செய்யும் = எண்ணியவற்றையே முடித்து வைக்கும்
--------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
---------------------------
எந்திரச் சிற்பிகள் தாம் கண்ணாற்
கண்ட பொருள்களை அதேவடிவில் செய்து முடிப்பர்; பயனுள்ளவை எனத் தம் கல்வி கேள்விகளால் தெளிந்தவற்றையே அறி9ஞர்கள்
செய்வர்; சான்றோர்
பிறர் விரும்பியனவற்றுள் நன்மை
தருவன வனவற்றையே செய்வர்; எவரையும்
சினவாத அன்புமிக்க
பெரியோர்கள் தாம் எண்ணியவற்றை எல்லாம் செய்துமுடிப்பர்.
------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
“நான்மணிக்கடிகை” வலைப்பூ.
[தி.ஆ:2052,நளி(கார்த்திகை),04]
{20-11-2021}
------------------------------------------------------------------------------------------------