விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 1 டிசம்பர், 2021

கண்ணிற் சிறந்த உறுப்பில்லை - பாடல்.57 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்.  இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (57)

-------------------------------

கண்ணிற் சிறந்த உறுப்பில்லை கொண்டானின்

துன்னிய கேளிர் பிறரில்லை மக்களின்

ஒண்மையவாய்ச் சான்ற பொருளில்லை ஈன்றாளோ

டெண்ணக் கடவுளு மில்.

 

-------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------

கண்ணில் சிறந்த உறுப்பில்லை; கொண்டானின்

துன்னிய கேளிர் பிறர் இல்லை மக்களின்

ஒண்மையவாய்ச் சான்ற பொருள் இல்லை ஈன்றாளோடு

எண்ணக் கடவுளும் இல்.

 

-----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

----------------------

உடலில் பல்வேறு உறுப்புகள் இருந்தாலும், மனிதனுக்கு இந்த உலகத்தைப்  பார்க்க உதவும் கண்களைப் போல் மேலான உறுப்பு வேறு எதுவுமில்லை !

 

குலமகளிருக்கு, அவளைத் திருமணம் செய்துகொண்ட கணவனைப் போல் நெருங்கிய உறவினர் இந்த உலகில் வேறு யாருமில்லை !

 

இவ்வுலகில் ஒளிமணிகள் பல இருந்தாலும், பெற்றோர்க்குத் தம் பிள்ளைகளைப் போல் மேன்மையான ஒளிமணி வேறு எதுவுமில்லை !

 

அதுபோல், பிள்ளைகளுக்குத் தன்னை ஈன்ற தாயைப் போல் மேலான கடவுள் இவ்வுலகில் வேறு இல்லவே இல்லை !

 

-------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

----------------------------

கண்ணின் = கண்ணைப் போல் ; சிறந்த உறுப்பு = மேலான உறுப்பு ; இல்லை =  ஒருவனுக்கு வேறு இல்லை ; கொண்டானின் = தன்னைத் திருமணம் செய்துகொண்ட கணவனைப் போல் ; துன்னிய கேளிர் = நெருங்கிய உறவினர் ; பிறர் இல்லை = (குலமகளிர்க்கு) வேறு ஒருவரும் இல்லை ; மக்களின் = தம் மக்களைப் போல் ; ஒண்மையவாய் = ஒளியுடையவாய் ; சான்ற = அமைந்த ; பொருள் = வேறு பொருள் ; இல்லை = பெற்றோர்க்கு இல்லை ; ஈன்றாளோடு = தாய்க்கு நிகராக ; எண்ண = மதிப்பதற்குரிய ; கடவுளும் இல் = கடவுளும் வேறில்லை.

 

-------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

------------------------------

ஒருவனுக்குக் கண்ணைப் போல் மேலான உறுப்பு வேறில்லை; குலமகளுக்குக் கணவனைப் போல நெருங்கிய உறவினர் வேறில்லை ; பெற்றோர்க்கு மக்களைப் போல் ஒளியுள்ள பொருள்கள் வேறில்லை ; குழந்தைகட்குத் தாயைப் போல மேலான கடவுள் வேறில்லை.

 

------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),15]

{01-12-2021}

-------------------------------------------------------------------------------------------------