விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு
நூல்களுள் ஒன்று ! இந்நூல்
சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத் தமிழறிஞர். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
----------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (57)
-------------------------------
கண்ணிற் சிறந்த உறுப்பில்லை கொண்டானின்
துன்னிய கேளிர் பிறரில்லை மக்களின்
ஒண்மையவாய்ச் சான்ற பொருளில்லை ஈன்றாளோ
டெண்ணக் கடவுளு மில்.
-------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
-----------------------------------------------------
கண்ணில் சிறந்த உறுப்பில்லை; கொண்டானின்
துன்னிய கேளிர் பிறர் இல்லை மக்களின்
ஒண்மையவாய்ச் சான்ற பொருள் இல்லை ஈன்றாளோடு
எண்ணக் கடவுளும் இல்.
-----------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
----------------------
உடலில் பல்வேறு உறுப்புகள் இருந்தாலும், மனிதனுக்கு
இந்த உலகத்தைப் பார்க்க
உதவும் கண்களைப் போல் மேலான உறுப்பு வேறு எதுவுமில்லை !
குலமகளிருக்கு, அவளைத் திருமணம் செய்துகொண்ட
கணவனைப் போல் நெருங்கிய உறவினர் இந்த உலகில் வேறு யாருமில்லை !
இவ்வுலகில் ஒளிமணிகள் பல இருந்தாலும், பெற்றோர்க்குத்
தம் பிள்ளைகளைப் போல் மேன்மையான ஒளிமணி வேறு எதுவுமில்லை !
அதுபோல், பிள்ளைகளுக்குத் தன்னை ஈன்ற தாயைப் போல் மேலான கடவுள் இவ்வுலகில்
வேறு இல்லவே இல்லை !
சொற்பொருள்:
----------------------------
கண்ணின் = கண்ணைப் போல் ; சிறந்த உறுப்பு = மேலான
உறுப்பு ; இல்லை
= ஒருவனுக்கு வேறு இல்லை ; கொண்டானின் = தன்னைத் திருமணம் செய்துகொண்ட
கணவனைப் போல் ; துன்னிய கேளிர் = நெருங்கிய
உறவினர் ; பிறர் இல்லை = (குலமகளிர்க்கு) வேறு
ஒருவரும் இல்லை ; மக்களின் = தம் மக்களைப் போல் ; ஒண்மையவாய் = ஒளியுடையவாய் ; சான்ற = அமைந்த ; பொருள் = வேறு
பொருள் ; இல்லை = பெற்றோர்க்கு இல்லை ; ஈன்றாளோடு = தாய்க்கு
நிகராக ; எண்ண = மதிப்பதற்குரிய ; கடவுளும்
இல் = கடவுளும் வேறில்லை.
-------------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
------------------------------
ஒருவனுக்குக் கண்ணைப் போல் மேலான உறுப்பு வேறில்லை; குலமகளுக்குக்
கணவனைப் போல நெருங்கிய உறவினர் வேறில்லை ; பெற்றோர்க்கு மக்களைப்
போல் ஒளியுள்ள பொருள்கள் வேறில்லை ; குழந்தைகட்குத் தாயைப் போல மேலான கடவுள் வேறில்லை.
------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”நான்மணிக்கடிகை” வலைப்பூ,
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),15]
{01-12-2021}
-------------------------------------------------------------------------------------------------