விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 12 டிசம்பர், 2021

பதிநன்று பல்லார் உறையின் - பாடல்.72 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

---------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (72)

--------------------------------

பதிநன்று பல்லார் உறையின் ஒருவன்

மதிநன்று மாசறக் கற்பின்நுதிமருப்பின்

ஏற்றான்வீ றெய்தும் இனநிரை தான்கொடுக்குஞ்

சோற்றான்வீ றெய்துங் குடி.

--------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

---------------------------------------------------------------------------------------------

பதி நன்று பல்லார் உறையின்; ஒருவன்

மதி நன்று மாசு அறக் கற்பின்; – நுதி மருப்பின்.

ஏற்றான் வீறு எய்தும் இன நிரை; தான் கொடுக்கும்

சோற்றான் வீறு எய்தும் குடி.

----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

-----------------------

முயற்சியும் ஒற்றுமையும் உடைய நன்மக்கள் பலபேர் ஒரு ஊரில் வாழ்வர்களாயின் அந்த ஊர் வாழ்வதற்கு மிக நல்ல ஊராகும் !

எவற்றையெல்லாம் ஒருவன் கற்கிறான் என்பதைவிட,  கற்பவற்றை  ஐயந்திரிபக்  கற்பானாகில் அவனது அறிவு தெளிவு பெறும் !

கூர்ங் கொம்புகளை உடைய எருதுகள் உடனிருக்குமாயின், மேய்ச்சல் நிலத்தில் ஆனிரைகளின் பாதுகாப்பு மிகுதியாகத் திகழும் !

ஏழை எளியவர்க்கு உணவளித்து அவர்களின் வயிற்றுப் பசியை எவனொருவன்  தீர்க்கிறானோ, அவனது குலம் தழைத்தோங்கும் !

---------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

---------------------------

பல்லார் உறையின் = பலரும் நிறைந்து ஒத்து வாழ்வார்களானால் ; பதி நன்று = ஊர் நன்றாகும் ; மாசு அறக் கற்பின் = குற்றம் அறும்படிக் கற்பானாயின் ; ஒருவன் மதி நன்று = ஒருவனது அறிவு தெளிவு பெறும் ; இன நிரை = ஆனிரைகள் ; நுதி மருப்பின் = கூரிய கொம்புகளை உடைய ; ஏற்றான் = எருதுகளால் ; வீறு எய்தும் = சிறப்படையும் ; தான் கொடுக்கும் = தான் ஏழைகளுக்குக் கொடுக்கும் ; சோற்றான் = உணவினால் ; குடி = தான் பிறந்த குடி ; வீறு எய்தும் = பெருமை அடையும்.

---------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------------

பலரும் நிறைந்து ஒத்து உறைவாரானால்  ஊர் நன்றாம் ; ஒருவன் ஐயந் திரிபறக் கற்பானானால் அவன் மதி நன்றாகும் ; ஆனிரைகள் கூர்ங்கொம்புகளை உடைய ஏறுகள் உடனிருத்தலால் சிறப்படையும் ; ஏழைகட்கு உணவளிப்பதனால் ஒருவனது குடி மேலோங்கும் !

---------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

"நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),26]

{12-12-2021}

--------------------------------------------------------------------------------------------