விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 30 நவம்பர், 2021

இரைசுடும் இன்புறா யாக்கை - பாடல்.52 - வை.வேதரெத்தினம் உரை !

 

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று நான்மணிக்கடிகை ! விளம்பி நாகனார் இயற்றிய   இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை   வலியுறுத்துகிறார் இந்தத்  தமிழறிஞர்.  இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (52)

---------------------------

 

இரைசுடும் இன்புறா யாக்கையுட் பட்டால்

உரைசுடும் ஒண்மை யிலாரைவரைகொள்ளா

முன்னை ஒருவன் வினைசுடும் வேந்தனையுந்

தன்னடைந்த சேனை சுடும்.

 

-----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------

இரை சுடும்  இன்பு உறா யாக்கையுள் பட்டால்

உரை  சுடும் ஒண்மை இலாரைவரை கொள்ளா

முன்னை ஒருவன் வினை சுடும் வேந்தனையும்

தன் அடைந்த சேனை சுடும்.

 

---------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

---------------------

 

உடல் நலம் இல்லாதபோது, நாவுக்கு அடிமைப்பட்டுக்  கண்டதையெல்லாம் உண்டால், செரியாமை ஏற்பட்டு, நம்மைத் துன்புறுத்தும் !

 

அறிவற்ற மூடர்கள் பேசக் கூடாதவற்றையெல்லாம்  பேசுவதால்,  அவர்கள்  வாய்ச்சொல்லே அவர்களுக்கு எதிராக மாறி,  துன்பத்தை விளைவிக்கும் !

 

அறநெறிக்கு மாறாக  ஒருவன் முன்பு செய்த தீய செயல்களெல்லாம் இப்போது அவனுக்கு எதிராக நின்று  அவனையே துன்புறுத்தும் !

 

அதுபோல், அறநெறி தவறி அனைவரையும்  துன்புறுத்தும் அரசனை, அவனது படைகளைச் சேந்த வீரர்களே இரக்கமின்றிக் கொன்றுவிடுவார்கள் !

 

-----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------

 

இரை = உணவு ; இன்பு உறா = பிணியினால் துன்பமுறும் ; யாக்கையுள் பட்டால் = வயிற்றில் சேர்ந்தால் ; சுடும் = வருத்தும் ; ஒண்மை இலாரை = அறிவு விளக்கம் இல்லாதவர்களை ; உரை சுடும் = அவர் வாய்மொழியே அவரைத் துன்புறுத்தும் ; ஒருவன் = ஒருவனது ; வரை கொள்ளா = அறத்தின் எல்லையிற் படாத ; முன்னை வினை = முன் செய்த தீவினை ; சுடும் = இப்பிறப்பில் வந்து வருத்தும் ; வரை கொள்ளா = அறத்தின் எல்லையிற் படாத ; வேந்தனையும் =  அரசனையும் ; தான் அடைந்த = தன்னைச் சேர்ந்த ; சேனை = படைகளே ; சுடும் = கொல்லும்.

 

 

----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

----------------------------

பிணியுள்ள உடம்பில் சேரும் உணவு செரியாமையால் துன்புறுத்தும் ; அறிவிலாரை அவர் வாய்ச்சொல்லே வருத்தும் ; முன் செய்த தீவினைகள் இம்மையில் வந்து துன்புறுத்தும் ; அறத்தின் வரையில் நில்லாத அரசனைச் சேனைகளே கொல்லும் !

 

----------------------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி (கார்த்திகை),14]

{30-11-2021}

---------------------------------------------------------------------------------------------