நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்
கணக்கு நூல்களில் ஒன்று ! கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த இலக்கியம். இதை இயற்றியவர் விளம்பி நாகனார் என்பவர். 101 பாடல்களைக்
கொண்ட இந் நூலிலிருந்து ஒரு பாடல் !
-----------------------------------------------------------------------------------------------
பாடல் (03)
------------------
எள்ளற்க என்றும் எளியரென்று ! என்பெறினும்
கொள்ளற்க கொள்ளார்கை மேற்பட – உள்சுடினும்
சீறற்க சிற்றில் பிறந்தாரை ! கூறற்க !
கூறல்ல வற்றை விரைந்து !
-----------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
---------------------
எளிமையான தோற்றத்தை
அளவுகோலாக வைத்து எந்தவொரு மனிதரையும் நாம்
ஏளனமாக எண்ணலாகாது !
பண்பில்லாத
மனிதன் தருகின்ற பொருள், மதிப்பில்
எத்துணை உயர்வுடையதாக இருந்தாலும் அதை
வாங்கலாகாது !
ஏழை எளிய
மக்கள் எத்துணைத் தவறு செய்தாலும், அவர்கள் மீது இரக்கமின்றிச் சினம் கொள்ளலாகாது
!
அதுபோல், எதற்காகவும்
உள்ளம் பதை பதைப்பு அடைந்து, யாரிடத்தும் சொல்லக் கூடாத சுடுசொற்களைச் சொல்லலாகாது !
-----------------------------------------------------------------------------------------------
சொற் பொருள்:
-----------------------------
எள்ளற்க = இகழ்ந்து பேசாதே ; என் பெறினும் = மிகச் சிறந்த ஒன்றைப் பெறுவதானாலும்
கூட ; கொள்ளற்க = வாங்காதே ; கொள்ளார் கை = கொள்ளத் தகாதவருடைய கைகள் ; மேல ஆ = அவர்
கை மேலேயும் உன் கை கை கீழேயும் ; உள் சுடினும்
= ஏழையின் செய்கை உன் மனத்தை வருத்தினாலும் ; சீறற்க = சினந்து பேசாதே ; சிற்றில் பிறந்தாரை
= ஏழைகளை ; கூறல்லவற்றை = சொல்லத் தகாத சொற்களை ; விரைந்து = பதை பதைப்பு அடைந்து
; கூறற்க = சொல்லிவிடாதே !
------------------------------------------------------------------------------------------------
எவரையும் எளியவர் என்று இகழாதே ! சிறந்த பொருளாயினும் தகாதவர் தந்தால் வாங்காதே ! ஏழை எளியோரை எதற்காகவும் சினந்துகொள்ளாதே ! அதுபோல் தகாத சொற்களைப் பதை பதைத்துச் சொல்லிவிடாதே !
-------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
“நான்மணிக்கடிகை” வலைப்பூ.
[தி.ஆ:2052,துலை(ஐப்பசி),30]
{16-11-2021}
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக