விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 17 நவம்பர், 2021

கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும் - பாடல்.06 - வை.வேதரெத்தினம் உரை !

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய நான்மணிக் கடிகை  கடவுள் வாழ்த்து உள்பட 106 பாடல்களைக் கொண்டது.. இதை இயற்றியவர் விளம்பி நாகனார் என்னும் பெரும் புலவர். இதிலிருந்து ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------

பாடல்:(06)

--------------------

கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும்; மான் வயிற்றில்

ஒள்ளரி  தாரம்  பிறக்கும்;  பெருங்கடலுள்

பல்விலைய முத்தம் பிறக்கும்; அறிவார்யார்

நல்லாள் பிறக்குங் குடி.

------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

----------------------

காட்டில்,  தானாகவே தோன்றி வளர்வது கள்ளிச் செடி. எந்த உயிரினத்திற்கும் எவ்வித பயனுமில்லாத இந்தக் கள்ளிச் செடிகளுக்கு நடுவில்தான்  பெருமதிப்புடைய அகில் தோன்றி வளர்கிறது !

 

கானகத்தே திரிந்து வாழ்கிறது மான். உண்பவர்க்கு அல்லால், பிறருக்கு எவ்வகையிலும் பயன்படாத   இந்த மானின்  வயிற்றில் தான் ஒப்பனைக் கலைக்குப் பெரிதும் உதவுகின்ற அரிதாரம் தோன்றுகிறது !

 

தாகம் ஏற்படுகையில்,   உண்பதற்கு ஒரு துளியும் தகுதியில்லாதது உவர்நீர். இத்தகைய உவர்நீர் நிறைந்திருக்கும் பெருங்கடலில் தான் விலைமதிக்க முடியாத முத்து பிறக்கிறது !

 

இப்படி ஒவ்வொன்றின்  பிறப்பையும் அறியமுடிகிற மனிதனால் நல்லொழுக்கம் மிக்க சான்றோர்  எந்தக் குடியில் பிறக்கிறார்கள் என்பதை மட்டும்   அறிய முடிவதில்லை  ! ஏன் ? இதுதான் இயற்கையின் திருவிளையாடல் !

-------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-------------------------------

அகில் = அகிற் கட்டை; கள்ளி வயிற்றின் பிறக்கும் = கள்ளி மரத்தின் நடுவில் உண்டாகும் ; ஒள் அரிதாரம் = ஒளியுள்ள அரிதாரம்; மான் வயிற்றில் பிறக்கும் = மான் வயிற்றில் உண்டாகும்; பல் விலைய முத்தம் = மிக்க விலையுடைய முத்துக்கள்; பெருங் கடலுள் பிறக்கும் = பெரிய கடலினுள் பிறக்கும்; நல் ஆள் = நல்ல மக்கள்; பிறக்கும் குடி = பிறக்கும் குடியை; அறிவார் யார் = முன்பே அறிய வல்லவர் யார் ? (யாருமில்லை)

------------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

--------------------------------


கள்ளிச் செடிகளுக்கு இடையில் அகில் தோன்றி வளர்கிறது; மானின் வயிற்றில் அரிதாரம் தோன்றுகிறது; கடலில் முத்து பிறக்கிறது; ஆனால், சான்றோர் பிறக்கும் குடியை யாரும் அறிய வல்லார் யாரோ ? யாராலும் முடியாது !

------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),01]

{17-11-2021}

-------------------------------------------------------------------------------------------------

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக