விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 19 நவம்பர், 2021

புகழ் செய்யும் பொய்யா விளக்கம் - பாடல்.24 - வை.வேதரெத்தினம் உரை !

கடைச்சங்க காலத்து நூலான நான்மணிக் கடிகை, கடவுள் வாழ்த்து உள்பட மொத்தம் 106 வெண்பாக்களை உடையது. விளம்பி நாகனார் என்னும் பெரும் புலவர் படைத்த  இவ்விலக்கியம் பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று ! இதிலிருந்து ஒரு பாடல !

-------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (24)

----------------------

புகழ்செய்யும்  பொய்யா  விளக்கம்  இகந்தொருவர்ப்

பேணாது  செய்வது  பேதைமை    காணாக்

குருடனாச்  செய்வது  மம்மர்இருள்  தீர்ந்த

கண்ணராச்  செய்வது கற்பு.

-------------------------------------------------------------------------------------------------

பொருள்:

-------------

பொய்யாமை   என்னும்  ஒளியில் நடை பயிலத்  தொடங்கினால் , அது புகழைக் கொண்டு வந்து சேர்க்கும் ! 

முறை கடந்து, ஒருவரையும் மதியாது,  அறியாமை வழிச் செல்லல்  தீமையைக் கொண்டு வந்து சேர்க்கும் !

கல்வியறிவற்ற மனிதனின் மதி மயக்கம்,  இரு  கண்களிருந்தும் அவனைக் குருடனாகச் செய்துவிடும் !

ஆனால்,  கல்வியானது   ஒரு மனிதனின் குருட்டுத் தனத்தை  அழித்து அவனை அறிவாளி  ஆக்கிவிடும் !

-------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-------------------------------

பொய்யா விளக்கம் = பொய்யாமையாகிய ஒளி;  புகழ் செய்யும் = எங்கும் புகழை உண்டாக்கும்; பேதைமை = அறியாமை;   இகந்து = முறை கடந்து ; ஒருவர்ப் பேணாது = ஒருவரையும் மதியாமல்;  செய்வது = தீயவை செய்வதாம்;  மம்மர் =  கற்றறிவில்லா மயக்கம்;  காணா = வழி காணாத;  குருடனாச் செய்வது = குருடனாகச் செய்வதாம்;  கற்பு = கல்வியறிவு;  இருள் தீர்ந்த = குருடு நீங்கிய; கண்ணராச் செய்வது  = கண்ணொளி உடையராகச் செய்வதாம்.

-------------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

------------------------

பொய்யாமை புகழையும்,  அறியாமை  தீயவை செய்தலையும், கல்லாமை அறியாமையையும்,  கல்வியானது  அறிவையும் உண்டாக்கும் !

-------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),03]

{19-11-2021}

-------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக