கி.பி.2- ஆம் நூற்றாண்டில் தோன்றிய
நூலான நான்மணிக் கடிகையை இயற்றியவர் விளம்பி நாகனார் என்னும் பெரும் புலவர். பதினெண் கீழ்க் கணக்கு
என்னும் நூல் வகையைச் சார்ந்த இவ்விலக்கியத்தில் பல அரிய கருத்துகள் சொல்லப்படுகின்றன ! இதிலிருந்து ஒரு பாடல் !
-------------------------------------------------------------------------------------------------
பாடல் : (29)
------------------------------
கோல்நோக்கி வாழும்
குடியெல்லாம்; தாய்முலைப்
பால்நோக்கி வாழும்
குழவிகள்; - வானத்
துளிநோக்கி வாழும் உலகம்; உலகின்
விளிநோக்கி இன்புறூஉம் கூற்று.
-------------------------------------------------------------------------------------------------
பொருள்:
----------------
நாட்டில் வாழும் குடி மக்கள் எல்லாம்
ஆள்வோரின் செங்கோல் தவறாத நல்லாட்சியை எதிர்பார்த்து வாழ்கிறார்கள் !
பிறந்த குழந்தைகள் எல்லாம் தம் பசிக்குத் தாய்ப் பாலை நம்பியே உயிர் வாழ்கின்றன !
இந்த உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களும்
வானத்திலிருந்து பொழிகின்ற மழையைச் சார்ந்தே உயிர் வாழ்கின்றன !
ஆனால், கூற்றுவனோ தன் கடமையை நிறைவேற்ற
உயிர்களின் இறப்பை எதிர்பர்த்தே காத்திருக்கிறான் !
------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
---------------------------------------
குடியெல்லாம் = குடிமக்கள் எல்லோரும் ; கோல் நோக்கி = ஆள்வோரின் நேர்மை தவறாத
ஆட்சியை எதிர்பார்த்து ; வாழும் = உயிர் வாழ்வர் ; குழவிகள் = குழந்தைகள் எல்லோரும் ; தாய் முலைப்பால் நோக்கி = தம் பசிக்குத் தாய்ப்பாலை
நம்பியே ; வாழும் = உயிர் வாழ்கின்றன ; உலகம் = உலகத்தில் வாழும் உயிரினங்கள்
அனைத்தும் ; வானத் துளி நோக்கி = வானின்று பொழியும் மழையைச் சார்ந்து ; வாழும் = உயிர் வாழ்கின்றன ; கூற்று = கூற்றுவன் (எமன்) ; உலகின் விளி நோக்கி = உயிர்களின் இறப்பை நோக்கி ; (விளிதல் = இறத்தல்) ; இன்புறூஉம் = மகிழ்வான்.
------------------------------------------------------------------------------------------------
கருத்துச் சுருக்கம்:
------------------------------------
குடிகள் எல்லாம் அரசனது ஆட்சியால் உயிர் வாழ்வர் ; குழந்தைகள் தாயினது முலைப்பாலால் உயிர்வாழும் ; உயிர்கள் மழைத்துளியால் வாழும் ; கூற்றுவன் உயிர்களின் சாக்காட்டை எதிர்நோக்கி வாழ்வான் !
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
“நான்மணிக்கடிகை” வலைப்பூ.
[தி.ஆ:2052,நளி(கார்த்திகை),03]
{19-11-2021}
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக