விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 20 நவம்பர், 2021

கரப்பவர்க்குச் செல்சார் கவிழ்தல் - பாடல்.40 - வை.வேதரெத்தினம் உரை !


நான்மணிக்கடிகை  என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. முழுவதும் வெண்பாக்களால் இயலும் நூல். இதை இயற்றியவர் விளம்பி நாகனார் என்னும் பெரும் புலவர். சங்க கால இலக்கியமான இதிலிருந்து ஒரு பாடல் !

 

-----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (40)

------------------------

கரப்பவர்க்குச் செல்சார் கவிழ்தலெஞ் ஞான்றும்

இரப்பவர்க்குச் செல்சார்ரொன்  றீவார்பரப்பமைந்த

தானைக்குச் செல்சார் தறுகண்மை ஊனுண்டல்

செய்யாமை செல்சா ருயிர்க்கு !

 

------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------------

கரப்பவர்க்குச்  செல்சார்  கவிழ்தல் எஞ்ஞான்றும்

இரப்பவர்க்குச் செல்சார்  ஒன்று  ஈவார்பரப்பு அமைந்த

தானைக்குச்  செல்சார்  தறுகண்மை   ஊனுண்டல்

செய்யாமை  செல்சார்  உயிர்க்கு !

 

-----------------------------------------------------------------------------------

கருத்துரை:

------------------

தன்னிடம் பொருள் இருந்தும், இரவலர்க்குத் தர விரும்பாத  கறுப்பு உள்ளம் படைத்தோர்க்குப் பற்றுக்கோடாய் அமைவது,  இரவலரைக் கண்டதும் தலைகுனிந்து கொண்டு , கண்டும் காணாது நிற்றலாகும் !

 

இல்லையென்று இரப்பவர்களுக்கு பற்றுக் கோடாய் அமைவது , எக்காலத்தும்   இல்லையென்று சொல்லாது ஈத்துவக்கும்  நன்மனம் படைத்த நல்லவர்களை நாடிச் செல்லுதலாகும் ! 

 

போர்க்களத்தில்  பரபரப்பும், சுறு சுறுப்புமாக இயங்கும்  படைகளுக்கு வெற்றியை ஈட்டித் தரும்  பற்றுக் கோடாய் அமைவது அவர்களது அச்சமின்மையும் வீரமுமாகும் !

 

அதுபோல், மனித உயிர்களுக்கு மாண்பு தரும் பற்றுக் கோடாக அமைவது  பிற உயிரினங்களைக்  கொன்று அவற்றின் இறைச்சியை உண்ணாது தவிர்த்தல் ஆகும் !

 

------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------

 

கரப்பவர்க்கு = ஏதும் இல்லை என்று ஒளிப்பவர்களுக்கு ; செல்சார் = அவர் மேற்கொள்ளும் சார்பு; (செல்சார் = சார்பு என்பது பொருள்; அஃதாவது சார்ந்து நிற்றற்குரிய நிலை அல்லது பற்றுக்கோடு)  கவிழ்தல் = இரந்து வருவாரைக் கண்டவிடத்து முகம் கவிழ்ந்து நிற்றலாகும்;  எஞ்ஞான்றும் = எக்காலத்தும்; இரப்பவர்க்கு = இல்லையென்று கேட்டு வரும் இரவலர்க்கு;  செல்சார் = செல்லுதற்குரிய பற்றுக்கோடு;  ஒன்று ஈவார் = தாம் வேண்டுவதொன்றை தந்து  மகிழ்ச்சி கொள்ளும் செல்வராவார்; பரப்பு அமைந்த = போரில் சுறு சுறுப்பு உடைய ; தானைக்கு = படைக்கு; செல்சார் = பற்றுக்கோடு; தறுகண்மை = வீரமாகும்; உயிர்க்கு = ஒருவனது உயிருக்கு ; செல்சார் = செல்லுதற்குரிய பற்றுக்கோடு; ஊன் உண்டல் செய்யாமை = பிற உயிர்களின் இறைச்சியை உண்ணாமல் இருத்தலாகும்.

------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------

இரவலர்க்கு இல்லையென்பார்க்குப் பற்றுக் கோடு, தலைகுனிந்து வேறு புறம் பார்த்து நிற்றல்;  இல்லாத வறியவர்க்குப் பற்றுக்கோடு ஈத்துவக்கும் நல்லோர்கள்;  படைகளுக்குப் பற்றுக்கோடு  அவர்களது வீரம்;  உயிர்களுக்குப் பற்றுக்கோடு , பிறவுயிர்களைக் கொன்று உண்ணாமை !

 

------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),04]

{20-11-2021}

-----------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக