விளம்பிநாகனார் என்னும் சங்க காலப் புலவர் இயற்றிய நூல் நான்மணிக்கடிகை. உலகியல்நெறி
சார் கருத்துகளை ஒவ்வொரு பாடலிலும் எடுத்துரைக்கும் நாகனார், பாடல்
தோறும் நான்கு கருத்துகளை
வலியுறுத்துகிறார். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
-----------------------------------------------------------------------------------------------
பாடல் எண்:
(43)
-------------------------
பிறக்குங்கால் பேரெனவும் பேரா;
இறக்குங்கால்
நில்லெனவும் நில்லா உயிரெனைத்தும்;
- நல்லாள்
உடம்படின் தானே பெருகுங்
– கெடும்பொழுதில்
கண்டனவுங் காணாக் கெடும்.
------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
------------------------------------------------------------------------------------------------
பிறக்கும்கால் பேர் எனவும் பேரா;
இறக்கும் கால்
நில் எனவும் நில்லா உயிர் எனைத்தும்;
- நல்லாள்
உடம்படின் தானே பெருகும்
– கெடும்பொழுதில்
கண்டனவும் காணாக் கெடும்.
------------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
------------------
உயிரினங்கள் இந்த உலகத்தில் பிறக்கும் போது, “ஏ
உயிரே ! நீ இந்த உடலை விட்டு நீங்கி விடு”
என்று யார் கட்டளையிட்டாலும் அதற்காக
அது நீங்கிவிடாது !
இறக்கும் போது,
“ஏ உயிரே ! நீ இந்த உடலை விட்டு நீங்காமல் அதிலேயே தங்கியிரு”
என்று யார் கட்டளையிட்டாலும் அதற்காக அது தங்கிவிடாது
!
ஒரு மனிதனுக்கு,
நல்ல மனிதர்களின் ஆதரவும், துணையும், மதியுரையும்
வலுவாக இருந்தால், அவனிடம் செல்வமும் நிரம்ப வந்து சேரும் !
அதுபோல்,
நல்ல மனிதர்களின் ஆதரவும் துணையும், மதியுரையும் அவனைவிட்டு நீங்கிவிட்டால், சேர்ந்திருந்த செல்வமும் விரைவில் குறைந்து மறைந்து போய்விடும்
!
-------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
------------------------
உயிர் எனைத்தும்
= உயிரெல்லாம்; பிறக்குங்கால்
= இந்த உலகத்தில் பிறக்கும் போது; பேர் எனவும்
பேரா = உடலைவிட்டு நீங்கிவிடு என்றாலும் நீங்காது
; இறக்குங்கால் = அவை இறக்கும் போது; நில் எனவும் நில்லா = இவ்வுடலிலேயே நில் என்றாலும் நில்லாது;
நல்லாள் = நல் + ஆள் = நல்லாள் = நல்லவர்கள்;
உடம்படின் = துணை வலுவாக இருந்தால்; தானே
பெருகும் = செல்வமானது தானே பெருகும்; கெடும்
பொழுதில் = நல்லவர்களின் துணை நீங்கிப் போகும் காலத்தில்
; கண்டனவும் = முன்பு சேர்த்து
வைத்திருந்த பொருள்கள் கூட ; காணா = காணப்படாது ; கெடும்
= அழிந்துபோகும்.
-------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
-------------------------
உயிர்கள் பிறக்கும் போது
“உடலை விட்டு நீங்குக” என்றால் உயிர் நீங்கிவிடாது; இறக்கும் போது
“உடலிலேயே தங்கிவிடு” என்றாலும் உயிர் தங்கிவிடாது. நல்லவர்கள்
துணையிருந்தால் செல்வம் தானே சேரும்; நல்லவர்கள்
துணை நீங்குகையில் செல்வமும்
நீங்கிவிடும் !
-------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
“நான்மணிக்கடிகை” வலைப்பூ.
[தி.ஆ:2052,நளி(கார்த்திகை),04]
{20-11-2021}
-------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக