விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 29 நவம்பர், 2021

சிறந்தார்க்கு அரிய செறுதல் - பாடல்.51 - வை.வேதரெத்தினம் உரை !

 

நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! விளம்பி நாகனார் இயற்றிய   இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  நாகனார் வலியுறுத்துகிறார். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

-------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (51)

------------------------------

சிறந்தார்க் கரிய செறுதலெஞ் ஞான்றும்

பிறந்தார்க் கரிய துணைதுறந்து வாழ்தல்

வரைந்தார்க் கரிய வகுத்தூண்  இரந்தார்க்கொன்

றில்லென்றல் யார்க்கும் அரிது.

 

------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்

-----------------------------------------------

சிறந்தார்க்கு அரிய செறுதல், எஞ்ஞான்றும்

பிறந்தார்க்கு அரிய துணை துறந்து வாழ்தல்,

வரைந்தார்க்கு அரிய வகுத்து ஊண், இரந்தார்க்கு ஒன்று

இல் என்றல் யார்க்கும் அரிது.

 

------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

---------------------

மிகச்சிறந்த நண்பர்கள் என்று கருதப்படுவோர் எவரும் சினம் கொள்வதில்லை; அவர்கள் எக்காலத்திலும் ஒருவரையொருவர் சினந்து கொள்வதில்லை !

 

உயர்குடியில் பிறந்த மேன்மக்கள், சுற்றத்தாரை அரவணைத்தே வாழ்வர் ; அவர்கள் தம் சுற்றத்தாரை விட்டு எக்காலத்திலும் விலகி வாழ்வதில்லை !

 

செல்வத்தைத் தமக்காக மட்டுமே செலவு செய்பவர்களும் இருக்கிறார்கள் ; அவர்கள்  பிறருடன் பகிர்ந்து உண்பதை எக்காலத்திலும் விரும்புவது இல்லை !

 

அதுபோல், ஈர நெஞ்சுடைய மாந்தர்களும்  இவ்வுலகில்  இருக்கிறார்கள் ; அவர்கள்  இரந்து வருவோரிடம் இல்லை என்று எக்காலத்திலும் சொல்வது இல்லை !

 

------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-------------------------------

சிறந்தார்க்கு = நட்பிற் சிறந்தவர்களுக்கு ;  செறுதல் = தம் நண்பர்களின் செயல்களில்   பிழை கண்டவிடத்து   அவர்களைச் சினந்து விலக்கி வைத்தல்  ;  அரிய = இலவாம் ; பிறந்தார்க்கு = உயர் குடியில் பிறந்த மேலோர்க்கு ; எஞ்ஞான்றும் = எக்காலத்திலும் ; துணை துறந்து வாழ்தல் = தமக்குத் துணையான சுற்றங்களை துரந்து வாழுதல் என்பது  ;  அரிய = இல ; வரைந்தார்க்கு = உணவின் பொருட் செலவைத் தமக்கென்றே அளவு செய்து வாழ்கின்றவர்களுக்கு ; வகுத்து ஊண் = பிறர்க்குப் பகுத்து அளித்து உண்ணும் நிகழ்ச்சிகள் ; அரிய = இல ; யார்க்கும் = ஈர நெஞ்சுடைய எவருக்கும் ;  இரந்தார்க்கு = தம்பால் வந்து இரந்து கேட்பவர்கட்கு ; ஒன்று = ஒரு பொருள் ; இல் என்றல் = இல்லை என்று மறுத்துக் கூறுதல் ; அரிது = இல்லை.

 

------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------------

சிறந்த நண்பர்கள் தம்முள் ஒருவரையொருவர் சினந்துகொள்ளார் ;  உயர் குடிப்பிறப்பினர் தன் இனத்தாரை  நீங்கி வாழார் ; தமக்காகவே செலவு செய்கின்றவர்கள் பிறர்க்குப் பகுத்துண்டல் செய்வாரல்லர் ; அருள் உடையவர் எல்லோரும் இரந்தார்க்கு இல்லை என்று சொல்லார் !

 

-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),13]

{29-11-2021}

----------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக