விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு
நூல்களுள் ஒன்று ! இந்நூல்
சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத் தமிழறிஞர். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
-----------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (56)
--------------------------------
யானை யுடையார் கதனுவப்பர், மன்னர்
கடும்பரிமாக் காதலித் தூர்வர் – கொடுங்குழை
நல்லாரை நல்லவர் நாணுவப்பர் அல்லாரை
அல்லார் உவப்பது கேடு.
------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
-------------------------------------------------------
யானை உடையார் கதன் உவப்பர்; மன்னர்
கடும் பரிமாக் காதலித்து ஊர்வர் – கொடும்
குழை
நல்லாரை நல்லவர் நாண் உவப்பர்; அல்லாரை
அல்லார் உவப்பது கேடு.
------------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
---------------------
போர்க்களத்தில் சினமுற்றுத் தாக்கும் சிறந்த யானையே வெற்றிக்கு
வழிவகுக்கும் என்பதால், செங்களத்தில், யானைப் படை வீரர்கள், அதனிடம் சீறும் சினத்தையே
விரும்புவார்கள் !
மிகவிரைந்து ஓடுகின்ற மேன்மையான குதிரையில் ஏறிச்செல்வது
வீரத்துக்கு அடையாளம் என்பதால் அரசர்கள், விரைந்தோடும் புரவியில்தான் விரும்பி ஏறுவார்கள் !
மகரக் குழையணிந்த மங்கை என்றாலும்கூட, மங்கையரின் மேனி அழகுக்கு மேலும் அழகூட்டும் நாணம், அவளிடம் தவழ்வதையே
நல்லியல்புடைய ஆடவர்கள் விரும்புவார்கள் !
ஆனால், நாணத்தைத் துறந்துவிட்டு
நடைபயிலும், நல்லியல்பு இல்லாப் பெண்டிரிடம் நற்குணமில்லாத ஆடவர்கள் நல்லன அல்லாதவற்றையே நயந்து விரும்புவார்கள் !
------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
-----------------------------
யானை உடையார் = யானையை உடைய போர்த் தலைவர் ; கதன்
உவப்பர் = அதன் சினத்தை விரும்புவர் ; மன்னர் = அரசர் ; கடும்
பரிமா = மிக விரைவாக ஓடக்கூடிய குதிரையை ; காதலித்து = விரும்பி ; ஊர்வர் = அதன்
மேல் ஏறிச் செல்வர் ; கொடுங்குழை = வளைவான காதணியை அணிந்த ; நல்லாரை = மங்கையர்பால் ; நாண் = நாணத்தை ; நல்லவர் = நல்லியல்பு
உடையவர்கள் ; உவப்பர் = விரும்புவார்கள் ; அல்லாரை
= நாணுடையர் அல்லாத மகளிர்பால் ; அல்லார் = தீயோர் ; உவப்பது = விரும்புவது ; கேடு = தீய ஒழுக்கமேயாம்.
------------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
---------------------------------
யானையை உடையவர்கள் அதன் சினத்தை விரும்புவார்கள்; அரசர்கள்
மிகவிரைவாக ஓடக் கூடிய குதிரையை விரும்புவார்கள். நல்லியல்பு
உடைய ஆடவர்கள் நன் மங்கையரின் நாணத்தை விரும்புவார்கள்; தீய ஆடவர்கள்
தீய பெண்டில்பால் தீதையே விரும்புவர்.
---------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”நான்மணிக்கடிகை” வலைப்பூ.
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),14]
{30-11-2021}
----------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக