விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத் தமிழறிஞர். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
----------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (101)
---------------------------------
எண்ணொக்குஞ் சான்றோர் மரீஇயாரின் தீராமை
புண்ணொக்கும் போற்றார் உடனுறைவு – பண்ணிய
யாழொக்கும் நட்டார் கழறுஞ்சொல் பாழொக்கும்
பண்புடையாள் இல்லா மனை.
----------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
-------------------------------------------------------
எண் ஒக்கும் சான்றோர் மரீஇயாரின் தீராமை
புண் ஒக்கும் போற்றார் உடன் உறைவு – பண்ணிய
யாழ் ஒக்கும் நட்டார் கழறும் சொல் பாழ் ஒக்கும்
பண்புடையாள் இல்லா மனை.
-----------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
--------------------
ஆன்றோர்களிடம் நெடுநாள் பழகினவரைப் போல, அவரை
விட்டு அணுவளவேனும் அகலாது இருத்தல் அறிவுடைமைக்கு
அழகு ஆகும் !
இணக்கமாகப் பழக விரும்பாத எவரிடமும் , அணுக்கமாக இருந்து வாழ்தல் வலியைத்தரும் புண்ணுக்கு நிகராகும் !
நட்புமிக்கவர்கள் இடித்துரைக்கும் நற்சொற்கள் கடுமை மிக்கதாயினும், அவற்றை
யாழின் இனிய ஓசையாகக் கருத வேண்டும் !
மனைமாட்சியுடைய மனைவி இல்லாத வீடு பொலிவிழந்து பாழடைந்த உறைவிடத்துக்குச்
சமமானது என்று கருத வேண்டும் !
----------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
----------------------------
மரீஇயாரின் = நெடுநாள் பழகினவரைப் போல ; சான்றோர் = ஆன்றோர்களை ; தீராமை = நீங்காமலிருத்தல் ; எண் ஒக்கும் = அறிவுடைமையை ஒக்கும் ; போற்றார் = தம்மைப் போற்றி இணங்காதவாரோடு ; உடன்
உறைவு = உடனிருந்து வாழ்தல் ; புண்
ஒக்கும் = புண்ணினை ஒக்கும் ; நட்டார் = நட்பாயினார் ; கழறும்
சொல் = இடித்துரைக்கும் வன்சொல் ; பண்ணிய = நரம்புகளால்
இசை கூட்டப்பெற்ற ; யாழ் ஒக்கும் = யாழிசையை ஒக்கும் ; பண்புடையாள் = மனைமாட்சியுடைய
மனைவி ; இல்லா மனை = இல்லாத வீடு ; பாழ்
ஒக்கும் = பாழ்மனையை ஒக்கும்.
------------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
--------------------------------
சான்றோரை நீங்காது உறைதல் அறிவுடைமை ஆகும் ; இணக்கமில்லாரோடு
உடனுறைதல் புண்ணுக்கு நிகராகும் ; நட்புடையார் இடித்துரைக்கும் சொல் வலிதாயினும் அது யாழோசையைப்
போலும் இனிமை உடையதாகும் ; மனைமாட்சி உடைய மனையாள் இல்லாத மனை பாழ்மனையை ஒக்கும்.
---------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”நான்மணிக்கடிகை” வலைப்பூ,
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),28]
{14-12-2021}
----------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக