விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 14 டிசம்பர், 2021

வைததனால் ஆகும் வசையே - பாடல்.103 - வை.வேதரெத்தினம் உரை !

 

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

 

---------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (103)

---------------------------------

வைததனால் ஆகும் வசையே வணக்கமது

செய்ததனால் ஆகும் செழுங்கிளை செய்த

பொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்த

அருளினால் ஆகும் அறம்.

 

-----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

--------------------------------------------------------

வைததனால் ஆகும் வசையே; வணக்கம் அது

செய்ததனால் ஆகும் செழும் கிளை; செய்த

பொருளினால் ஆகும் ஆம் போகம்; நெகிழ்ந்த

அருளினால் ஆகும் அறம்.

 

-----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

---------------------

மற்றவர்கள் மீது  அன்புகாட்டி அரவணைக்காமல், அவர்களை வைவோமானால் நம்மீது  வசைப்பழியே  உண்டாகும் !

 

எல்லோர் மீதும் அன்பு பாராட்டி இணக்கமுடன் ஒழுகினால், நமது சுற்றமும் உறவும்  இனிதே பெருக்கமடையும் !

 

வீண் செலவு செய்யாமல் பொருட் செல்வத்தைப் பெருக்கிப் பாதுகாத்தால் இன்ப வாழ்வு எளிதில் உண்டாகும் !

 

மனத்தில் தோன்றும்  இரக்க உணர்வுகளே, அறச்செயல்களைச் செய்திட நமக்கு ஊக்கத்தை உருவாக்கும் !

 

-----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

--------------------------

வசை = நிந்தனை ; வைததனால் ஆகும் = தான் பிறரை வைததனால் ஒருவனுக்கு உண்டாகும் ; செழும் கிளை = மிக்க உறவு ; வணக்கமது செய்ததனால் ஆகும் = எல்லார்க்கும் வணங்கி ஒழுகியமையால் உண்டாகும் ; போகம் = இன்ப வாழ்க்கை ; செய்த பொருளினால் ஆம் = தேடிப் பெருக்கிய பொருளினால் உண்டாகும் ; அறம் = அறவினை ; நெகிழ்ந்த அருளினால் ஆகும் = குழைந்த இரக்கத்தினால் உண்டாகும்.

 

------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

------------------------------

பிறரை வைததனால் தமக்கு வசை உண்டாகும் ; வணங்கி ஒழுகுதலால்  உறவினர் மிகுவர் ; பொருளைத் தொகுத்ததனால் இன்ப வாழ்க்கை உண்டாகும் ; குழைந்த இரக்கத்தினால் அறவினை உண்டாகும்.

 

-----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),28]

{14-12-2021}

----------------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக