விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத் தமிழறிஞர். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
----------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (106)
--------------------------------
இன்சொலான் ஆகுங் கிழமை இனிப்பிலா
வன்சொலான் ஆகும் வசைமனம் – மென்சொலின்
நாவினால் ஆகும் அருள்மனம் அம்மனத்தான்
வீவிலா வீடாய் விடும்.
----------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
----------------------------------------------------------------------------------------------
இன்சொலால் ஆகும் கிழமை; இனிப்பு இலா
வன்சொலால் ஆகும் வசை மனம்; மென்
சொலின்
நாவினால் ஆகும் அருள் மனம்; அம்மனத்தால்
வீவு இலா வீடு ஆய்விடும்.
----------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
--------------------
இன்சொல் பேசும் மாந்தரைச் சுற்றி, இனிமை
நிலவும், நட்பும் வளரும் !
வன்சொல் பயிலும், நெஞ்சினில் என்றும் வஞ்சக எண்ணம் வளரும், பெருகும் !
நயமிகு சொற்கள் நாவில் தவழ்ந்தால் அருளும் பரிவும் முகிழ்த்திடச்
செய்யும் !
அருள்மனம் பிறவிப் பயனைத் துய்த்திட, அகல்வழி
காட்டும், உண்மை உணர்வீர் !
----------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
---------------------------
இன் சொலான் = இன்சொல்லால் ; கிழமை ஆகும் = ஒருவற்கு நட்புரிமை உண்டாகும் ; இனிப்பு இலா = இன்பமில்லாத ; வன்சொலான் = வன்சொல்லினால் ; வசை மனம் ஆகும் = கெட்ட கருத்து உண்டாகும் ; மென் சொலின் = நயமான சொல்லையுடைய ; நாவினால் = நாக்கினால் ; அருள் மனம் ஆகும் = இரக்க எண்ணம் உண்டாகும் ; அம் மனத்தான் = அவ்வருள் நெஞ்சத்தால் ; வீவு இலா = அழிவு இல்லாத ; வீடு ஆய்விடும் = வீடுபேறு உண்டாகும்.
------------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
-------------------------------
இன்சொல்லால் நட்புரிமை உண்டாகும் ; வன் சொல்லால் கெடு நினைவு உண்டாகும் ; நயமான சொற்களால் அருள் நெஞ்சம் உண்டாகும் ; அவ்வருள் நெஞ்சத்தால் அழிவிலாத வீடு பேறு உண்டாகும்.
---------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”நான்மணிக்கடிகை” வலைப்பூ,
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),28]
{14-12-2021}
----------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக