விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத் தமிழறிஞர். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
----------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (67)
-----------------------------
கைத்துடையான் காமுற்ற துண்டாகும் வித்தின்
முளைக்குழாம் நீருண்டேல் உண்டாந் திருக்குழாம்
ஒண்செய்யாள் பார்த்துறின் உண்டாகும் மற்றவள்
துன்புறுவாள் ஆகிற் கெடும்.
---------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
---------------------------------------------------------
கைத்து உடையான் காமுற்றது உண்டாகும்; வித்தின்
முளைக் குழாம் நீர் உண்டேல் உண்டாம்; திருக்குழாம்
ஒண் செய்யாள் பார்த்துறின் உண்டாகும்; மற்று
அவள்
துன்புறுவாள் ஆகில் கெடும்..
---------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
------------------------
செல்வச் செழுமை படைத்த மாந்தனுக்கு, அவனது
வாழ்வில் அவன் விரும்பிய அனைத்தும் அட்டியின்றிக் கிடைத்துவிடும்!
குவிந்து கிடக்கும் விதைகளுக்கு நீர் மட்டும் கிடைத்திடுமானால், அவற்றிலிருந்து
முளைகள் வெடித்து வெளிக்கிளம்பும் !
செல்வத் திருமகளாம் தாமரைச் செல்வியின் அருள் கிடைத்துவிட்டால், ஏழையிடம்
கூட பொருட் செல்வம் குவியத் தொடங்கும் !
ஆனால், அவள் எந்தவொரு மனிதனின் நடத்தை மீதாவது அருவருப்பு கொள்வாளெனில், அவனிடம்
உள்ள செல்வமும் அழிந்து போகும் !
----------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
----------------------------
கைத்து உடையான் = கைப்பொருள்
உள்ளவன் ; காமுற்றது = விரும்பிய பொருள் ; உண்டாகும் = கிடைக்கும் ; நீர்
உண்டேல் = நீர் பாய்ச்சல் உண்டானால் ; வித்தின்
முளைக்குழாம் = விதைகளின் முளைக் கூட்டம் ; உண்டாம் = தோன்றும் ; ஒண் செய்யாள் = ஒளி பொருந்திய
திருமகள் ; பார்த்துறின் = அருள் செய்தால் ; திருக்குழாம்
உண்டாகும் = திரளான பொருட் செல்வம் பெருகும் ; அவள் = அத்திருமகள் ; துன்புறுவாளாகின் = அருவருப்பு
கொண்டாள் எனில் ; கெடும் = உள்ள செல்வமும் அழியும். ;
----------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
--------------------------------
செல்வம் உடையவனுக்கு அவன் விரும்பிய பொருள் எல்லாம் கிடைக்கும் ; நீர்
கிடைத்தால் விதைகளிலிருந்து முளைகள் கிளம்பும் ; .திருமகள்
அருள் கிடைத்தால் செல்வம் கூடும் ; அவர் அருள் நீங்கினால் உள்ள செல்வமும் கெடும்.
----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”நான்மணிக்கடிகை” வலைப்பூ,
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),20]
{06-12-2021}
----------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக