விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத் தமிழறிஞர். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
--------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (70)
-------------------------------
கைத்தில்லார் நல்லவர் கைத்துண்டாய்க் காப்பாரின்
வைத்தாரின் நல்லர் வறியவர் – பைத்தெழுந்து
வைதாரின் நல்லர் பொறுப்பவர் – செய்தாரின்
நல்லர் சிதையா தவர்.
----------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
----------------------------------------------------------------------------------------------
கைத்து இல்லார் நல்லவர் கைத்து உண்டாய் காப்பாரின்;
வைத்தாரின் நல்லர் வறியவர்; – பைத்து
எழுந்து
வைதாரின் நல்லர் பொறுப்பவர்; – செய்தாரின்
நல்லர் சிதையாதவர்.
---------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
----------------------
ஒருவரிடம் நிறைய செல்வம் இருக்கிறது; ஆனால்
அதில் துளியளவு கூட எடுத்து தனக்குப் பயன்படுத்த மனம் இல்லை. அவரை விட, செல்வமே
இல்லாதவர்கள் எவ்வளவோ மேல் !
கோடி கோடியாய்ச் செல்வத்தைச் சேர்த்து வைத்து, அதைப்
பாதுக்காக்கத் தெரியாமல் ஏமாற்றுக்காரர்களிடம் கொடுத்து வைத்து ஏமாறுபவர்களை விட, செல்வமே
இல்லா வறியவர்கள் எவ்வளவோ மேல் !
தேவையில்லாமல் வெகுண்டெழுந்து வரைமுறையில்லாமல் பிறரை வைபவர்களை
விட, அத்தகைய வைதலுரையைப் பொறுத்துக்கொண்டு அமைதி காப்போர் எவ்வளவோ
மேல் !
அதுபோல், பிறருக்கு நன்மை செய்வதையே குறிக்கோளாக ஏற்று வாழ்க்கையை அமைத்துக் கொண்டு ஒழுகிவரும் மனிதர்களை விட செய்ந்நன்றியை
மறவாமல் இருப்பவர்களே மிகவும் மேல் !
---------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
----------------------------
கைத்து உண்டாய் = செல்வம்
உள்ளவராய் ; காப்பாரின் = அச்செல்வத்தை நுகராமல்
சேர்த்துப் பாதுகாப்பவரைவிட ; கைத்து இல்லார் = அச்செல்வம்
இல்லாத மாந்தர் ; நல்லவர் = மிகவும் நல்லவரேயாவார் ; வைத்தாரின் = அப்பொருளை
வைத்து இழப்பாரைவிட ; வறியவர் நல்லர் = வறுமையுடையோர்
நல்லவராவார் ; பைத்து எழுந்து – சினந்து
எழுந்து ; வைதாரின் = பிறரை வைதவர்களை விட ; பொறுப்பவர் = அவ் வைதலுரையைப்
பொறுப்பவர்கள் ; நல்லர்
= மிகவும் நல்லவராவார் ; செய்தாரின் = நன்மை செய்தவர்களை விட ; சிதையாதவர் = அந் நன்மையை
மறவாதவர்கள் ; நல்லர் = மிகவும் நல்லவராவார்.
----------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
------------------------------
செல்வமிருந்தும் பயன் அடையாதவர்களை விட, அச் செல்வம்
இல்லாதவர்கள் நல்லவர்கள் ; செல்வத்தைச் சேர்த்து வைத்து இழப்பாரினும் வறியவர் மிக நல்லவர் ; சினந்தெழுந்து
வைதாரினும் அதனைப் பொறுப்பவர்கள் மிகவும் நல்லவர் ; ஒரு நன்மை
செய்தாரினும் அச் செய்நன்றியை மறவாதவர் மிக நல்லவர்.
----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”நான்மணிக்கடிகை” வலைப்பூ,
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),20]
{06-12-2021}
---------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக