விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத் தமிழறிஞர். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
---------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (82)
-------------------------------
கொடுப்பின் அசனங் கொடுக்க – விடுப்பின்
உயிரிடை யீட்டை விடுக்க வெடுப்பிற்
கிளையுட் கழிந்தார் எடுக்க கெடுப்பின்
வெகுளி கெடுத்து
விடல்.
----------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
----------------------------------------------------------------------------------------------
கொடுப்பின் அசனம் கொடுக்க; விடுப்பின்
உயிர் இடையீட்டை விடுக்க எடுப்பின்
கிளையுள் கழிந்தார் எடுக்க; கெடுப்பின்
வெகுளி கெடுத்துவிடல்.
----------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
-----------------------
யாருக்காவது எதையாவது நீ கொடுக்க விரும்பினால், ஏழைமக்களை
அழைத்து அவர்கள் பசிக்குச் சோற்றைக்
கொடு !
உன்னிடமுள்ள எதையாவது நீ விட்டுவிட விரும்பினால், உன் உயிர்
மீதான அளவற்ற பற்றை இன்றே விட்டுவிடு !
யாரையாவது கைதூக்கிவிட நீ விரும்பினால், உன் சுற்றத்தாருள்
ஏழைகளாக உள்ளவர்களை அழைத்துக் கைதூக்கிவிடு !
எதையாவது கெடுப்பதற்கு நீ விரும்பினால், உன்னிடமுள்ள வெகுளியை (கோபத்தை) அழித்துக் கெடுத்துவிடு !
-----------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
-----------------------------
கொடுப்பின் = ஒருவர்க்கு ஒன்று கொடுப்பதானால் ; அசனம்
கொடுக்க = சோறு கொடுத்து
உண்பிக்க ; விடுப்பின் = ஒன்றை விட்டுவிடுவதானால் ; உயிர்
இடையீட்டை = உயிரைப் பற்றிய பற்றை ; விடுக்க = விட்டுவிடுக ; எடுப்பின் = ஒருவரைத்
தாங்கி மேலுயர்த்துவதானால் ; கிளையுள் = தன் சுற்றத்தாருள் ; கழிந்தார் = வாழ்
நலங்கள் அற்று ஏழைகளாய் உள்ளவர்களை ; எடுக்க = தாங்கி மேலுயர்த்துக ; கெடுப்பின் = ஒன்றைக்
கெடுப்பதானால் ; வெகுளி = சினத்தை ; கெடுத்துவிடல் = கெடுத்துவிடுக.
----------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
---------------------------------
கொடுப்பதானால் ஏழைகட்கு உணவு கொடுக்க ; விடுப்பதானால்
உயிரைப் பற்றிய பற்றை விடுக்க ; எடுப்பதானால் சுற்றத்தாருள் ஏழைகளை எடுக்க ; கெடுப்பதானால்
வெகுளியைக் கெடுக்க.
----------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: அசனம் என்பது வடசொல். உணவு
என்பது அதன் பொருள். தமிழில் அடிசில் என்பது உணவைக் குறிக்கும் சொல். செய்யுளில் “அசனம்” என்பதற்கு
மாற்றாக “அடிசில்” என்னும் சொல் வந்தாலும் தளை தட்டாது. அடிசில்
என்னும் சொல்லை நீக்கி, அசனம் என்னும் சொல்லைப் பெய்திருப்பது இடைச்செருகல் என்பது
என் கருத்து.
---------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”நான்மணிக்கடிகை” வலைப்பூ,
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),27]
{13-12-2021}
---------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக