உலகியல்நெறி சார்
கருத்துக்களை எடுத்துரைக்கும் நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள்
ஒன்று ! விளம்பி நாகனார் என்னும் பெரும் புலவர்
இயற்றிய இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல்
தோறும் நான்கு கருத்துகளைப்
புலவர் வலியுறுத்துகிறார்.
இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
------------------------------------------------------------------------------------------------
பாடல்
எண்: (48)
--------------------------
நாற்ற முரைக்கும்
மலருண்மை கூறிய
மாற்ற முரைக்கும்
வினைநலந் தூக்கின்
அகம்பொதிந்த
தீமை மனமுரைக்கும் முன்னம்
முகம்போல முன்னுரைப்ப
தில்
-------------------------------------------------------------------------------------------------
சந்தி
பிரித்து எழுதிய பாடல்
-------------------------------------------------------------------------------------------------
நாற்றம் உரைக்கும்
மலர் உண்மை கூறிய
மாற்றம் உரைக்கும்
வினை நலம், தூக்கின்
அகம் பொதிந்த
தீமை மனம் உரைக்கும் முன்னம்
முகம் போல
முன் உரைப்பது இல்.
-------------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
------------------
ஒரு இடத்தில்
பூ இருக்கிறது என்பதை,
அதன் நறுமணமே அனைவருக்கும் காட்டிக் கொடுத்துவிடும் !
கேள்விகளுக்கு
ஒருவன் இறுக்கும் விடைகளே, அவன் செயல்திறனை நமக்குக் காட்டிக் கொடுத்துவிடும் !
ஒருவன் நெஞ்சில்
நிறைந்திருக்கும் தீய எண்ணங்களை அவன் மனமே அவனுக்குக் காட்டிக் கொடுத்துவிடும்
!
அதுபோல,
ஒருவனது உள்ளத்தில் ஒளிந்திருக்கும் உணர்வுகளை அவனது முகமே வெளிப்படுத்திக் காட்டிவிடும்
!
-------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
-----------------------
மலர் உண்மை
= மலரின் இருப்பை ; நாற்றம்
உரைக்கும் = அதன் மணமே அறிவிக்கும் ; வினை
நலம் = ஒருவனது
செய்கைத் திறத்தை ; கூறிய மாற்றம் உரைக்கும் = அவன்
சொன்ன சொல்லே அறிவிக்கும் ; தூக்கின் = ஆராய்ந்தால்
; அகம் பொதிந்த தீமை = நெஞ்சிற் செறிந்த தீமைகளை ; மனம்
உரைக்கும் = அவனது நெஞ்சமே அவனுக்கு அறிவிக்கும்
; முன்னம் = ஒருவன் உள்ளக் குறிப்பை ; முகம்
போல = அவன் முகத்தைப் போல ; முன்
உரைப்பது இல் = முற்படத் தெரிவிப்பது வேறில்லை !
-------------------------------------------------------------------------------------------------
சுருக்கக்
கருத்து:
-------------------------
மலரின் இருப்பினை
அதன் மணமும், ஒருவன் செயல் திறனை அவன் சொல்லும்,
நெஞ்சிற் செறிந்த தீமையை அவன் நெஞ்சமும், உள்ளக் குறிப்பை முகமும் அறிவித்து விடும்
!
--------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”நான்மணிக்கடிகை” வலைப்பூ,
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),11]
{27-11-2021}
-------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக