விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத் தமிழறிஞர். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
---------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (79)
-------------------------------
சாவாத இல்லை பிறந்த உயிரெல்லாம்
தாவாத இல்லை வலிகளும் – மூவாது
இளமை யிசைந்தாரும் இல்லை – வளமையிற்
கேடின்றிச் சென்றாரும் இல்.
---------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
---------------------------------------------------------------------------------------------
சாவாத இல்லை பிறந்த உயிரெல்லாம்;
தாவாத இல்லை வலிகளும் – மூவாது
இளமை இசைந்தாரும் இல்லை – வளமையில்
கேடு இன்றிச் சென்றாரும் இல்..
-------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
-----------------------
பிறந்திருக்கும் அத்துணை உயிர்களும் என்றாவது ஒருநாள் மடிந்துதான்
தீரும்; இறவாத உயிர்கள் என்று உலகில் எதுவும் இல்லை !
உடல் வலிமை, மன வலிமை, அறிவு வலிமை என்று எந்த வலிமையானாலும், அவை அழியக்
கூடியதே; அழியாத வலிமை என்று உலகில் எதுவுமில்லை !
இளமை என்பது காலப் போக்கில் முதிர்வை அடைவது இயற்கை; மூப்பு அடையாத இளமை என்று இந்த உலகில் எதுவுமில்லை !
அதுபோல், செல்வ வளமும் நேரம் வந்தால் குறையக் கூடியதே; குறையாத
செல்வம் என்று இவ்வுலகில் எதுவும் இல்லை !
---------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
--------------------------
பிறந்த உயிரெல்லாம் = பிறந்த
உயிர்கள் எல்லாவற்றுள்ளும் ; சாவாத இல்லை = இறவாதன இல்லை ; வலிகளும் = வலிமைகளும் ; தாவாத
இல்லை ; கெடாதன இல்லை ; மூவாது = எஞ்ஞான்றும்
மூப்படையாமல் ; இளமை = இளமையை ; இசைந்தாரும் இல்லை = நிலையாய்ப்
பெற்றவர்களும் இல்லை ; வளமையில் = செல்வத்தில் ; கேடு இன்றி = குறைதல்
இல்லாமல் ; சென்றாரும் = எஞ்ஞான்றும் செல்வராய் ஓங்கினவரும் ; இல் = இல்லை.
---------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
--------------------------------
உலகத்தில் இறவாத உயிர்களும் இல்லை ; கெடாத
வலிமைகளும் இல்லை ; மூவாத இளமைகளும் இல்லை ; குறையாத
செல்வங்களும் இல்லை.
---------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”நான்மணிக்கடிகை” வலைப்பூ,
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),27]
{13-12-2021}
--------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக