ஒவ்வொரு பாடலிலும் நந்நான்கு கருத்துகளை உள்ளடக்கியது நான்மணிக் கடிகை ! கி.பி.
2-ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய இந்நூலை இயற்றியவர் விளம்பி நாகனார் என்னும் பெரும்புலவர் !.
இதிலிருந்து ஒரு பாடல் !
-------------------------------------------------------------------------------------------------
பாடல் எண்.(38)
------------------------------
மையால் தளிர்க்கும் மலர்க்கண்கள்; மாலிருள்
நெய்யால் தளிர்க்கும் நிமிர்சுடர்; - பெய்யல்
முழங்கத் தளிர்க்கும் குருகிலை
; நட்டார்
வழங்கத் தளிர்க்குமாம் மேல்.
------------------------------------------------------------------------------------------------
பொருளுரை:
---------------------
குவளை மலர் போன்ற கண்களுக்கு பெண்கள் மை எழுதினால் கண்களின் அழகு இன்னும் எடுப்பாகத் தெரியும் !
இருள் சூழ்ந்த அறையில் நிமிர்ந்து
எரியும் விளக்கின் சுடர்,
எண்ணெய் இடப்பட்டால் இன்னும் விளக்கமாக எரியும் !
கரிய மேகம் மழையாகப் பொழிவதற்கு முன்பு, எழுப்பும் இடி முழக்கம் கேட்டு குருக்கத்தி மரத்தின் இலைகள் தளிர்க்கும் !
அதுபோல், செல்வந்தர்கள், ஏழ்மை நிலையில் இருக்கும்
வறியவர்க்குக் கொடுத்துதவினால், அவர்களின்
செல்வ வளம் மேலும்
மேலும் பெருகும் !
------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
------------------------
மலர்க் கண்கள் = குவளை மலர் போன்ற கண்கள் ; மையால் = மை தீட்டிக் கொண்டால் ; தளிர்க்கும் = எடுத்துக்
காட்டும் ; மால் இருள் = மிக்க இருட்டில் ; நிமிர் சுடர் = நிமிர்ந்து எரியும்
நெருப்பு ; நெய்யால்
= விளக்கிற்கு இடும் எண்ணெய்யால் ; தளிர்க்கும் = விளங்கி
எரியும் ; பெய்யல்
= மேகம் ; முழங்க = பெய்தற்குக்
குமுற ; குருகு
= குருக்கத்தி மரம் ; இலை
தளிர்க்கும் = இலைகள் துளிர்விடும் ; மேல் = செல்வந்தர்கள் ; நட்டார்
வழங்க = ஏழ்மை
நிலையிலிருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்தலால் ; தளிர்க்கும் = மேலும்
செல்வ வளம் பெருகும்.
------------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
--------------------------
கண்கள், மையிடுதலால் மேலும் எடுப்பாக விளங்கும்; விளக்கு எண்ணெய் ஊற்றுவதால் எரியும்; குருக்கத்தி மரம் மழை முழக்கத்தால் இலை தளிர்க்கும்; அடுத்தவர்க்கு
வழங்குதலால் செல்வந்தரின் வளம் பெருகும் !
------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
“நான்மணிக்கடிகை” வலைப்பூ.
[தி.ஆ:2052,நளி(கார்த்திகை),04]
{20-11-2021}
------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக