விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 18 நவம்பர், 2021

பொய்த்தல் இறுவாய நட்புக்கள் - பாடல்.19 - வை.வேதரெத்தினம் உரை !

ஒவ்வொரு பாடலிலும் நந்நான்கு கருத்துகளை எடுத்துரைப்பதால் நான்மணிக் கடிகை என்னும் பெயர் பெற்று விளங்கும் இந்நூலை இயற்றியவர் விளம்பி நாகனார் என்னும் பெரும் புலவர் ! பதினெண் கீழ்க்கணக்கு நூல் வகையைச் சார்ந்த  இதில் கடவுள் வாழ்த்து உள்பட 106 பாடல்கள் இருக்கின்றன ! அவற்ருள் ஒரு பாடல் இதோ !

-------------------------------------------------------------------------------------------------

பாடல் எண் (19).

-------------------------------

பொய்த்தல்  இறுவாய  நட்புக்கள்  மெய்த்தாக

மூத்தல்  இறுவாய்த்  திளைநலந்   தூக்கில்

மிகுதி  இறுவாய  செல்வங்கள்  தத்தம்

தகுதி  இறுவாய்த்  துயிர்.

------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------------

பொய்த்தல்  இறுவாய  நட்புக்கள்;  மெய்த்தாக

மூத்தல்  இறுவாய்த்து  இளைநலம்;  தூக்கில்

மிகுதி  இறுவாய  செல்வங்கள்;  தத்தம்

தகுதி  இறுவாய்த்து  உயிர்.

------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

-----------------------

ஆராய்ந்து பார்த்தால், நமது  நட்புகள் எல்லாம் பொய்மை ஒழுக்கம் புகும்போது கெட்டு அழிந்து  போகின்றன !

இளமையின் வனப்பு  துடிப்பு,  ஈர்ப்பு எல்லாமே வாழ்நாளில் நம் கண்ணுக்கு எதிரிலேயே மூப்பினால் அழிந்து போகின்றன  !

ஆசைக்கு ஆட்பட்டு அகலக் கால் வைத்தால்,  எத்துணைச் செல்வம் இருந்தாலும்,  அவை   அனைத்தும்  கெட்டழிந்து போகின்றன !

அதுபோல், மனிதர்களின்   உயிர் வாழ்நாள் என்னும் எல்லையின் இறுதியை அடையும் போது  உடலைப்  பிரிந்து அழிந்துபோகிறது !

-------------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

--------------------------------

நண்பர்கள் தமக்குள் பொய்யொழுக்கம் புகும்போது, அவர் நட்புக் கெடும் ;   மூப்புத் தோன்றியதும்,  இளமை நலம் கெடும் ;  மீறிய செயல்களைத் தொடங்கியதும்   செல்வம் கெடும் ;  வாழ்நாள் எல்லையை அடைந்ததும் உயிரும் கெடும்  !

-------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

---------------------------

தூக்கில்  =  ஆராந்து பார்த்தால் ;  நட்புகள்  =  நேசங்கள்  ;  பொய்த்தல் இறுவாய  =  பொய்யொழுக்கமாகிய இறுதியை உடையன ;  இளைநலம் =  இளமையின் அழகு ;  மெய்த்தாக  =  கண்ணுக்கு நேராக  ;  மூத்தல் இறுவாய்த்து  =  மூப்பாகிய இறுதியை உடையது ;  செல்வங்கள் =  பொருட்செல்வமும் செல்வாக்கும் ;  மிகுதி இறுவாய  =  மிகையான செயல்களை இறுதியாக உடையன ;  உயிர் = மக்கள் உயிர் ;  தத்தம் தகுதி இறுவாய்த்து =  தத்தமது வாழ்நாள் எல்லையை இறுதியாக உடையது.

-------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

------------------------------------

நண்பர்கள் தமக்குள் பொய்யொழுக்கம் நேர்ந்ததாயின் அவர் நட்புக் கெடும் ; மூப்புத் தோன்றியதும் இளமை நலம் கெடும் ; மீறிய செயல்களைச் செய்யத் தொடங்கியதும் செல்வம் கெடும் ; வாழ்நாள், எல்லை கண்டதும் உயிர் கெடும் (மடியும்)

----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),02]

{18-11-2021}

----------------------------------------------------------------------------------------------