ஒவ்வொரு
பாடலிலும் நந்நான்கு
கருத்துகளை எடுத்துரைப்பதால் நான்மணிக் கடிகை என்னும் பெயர் பெற்று விளங்கும்
இந்நூலை இயற்றியவர் விளம்பி நாகனார் என்னும் பெரும் புலவர் ! பதினெண் கீழ்க்கணக்கு நூல் வகையைச்
சார்ந்த இதில் கடவுள் வாழ்த்து உள்பட 106 பாடல்கள் இருக்கின்றன ! அவற்ருள் ஒரு பாடல் இதோ !
-------------------------------------------------------------------------------------------------
பாடல்
எண் (19).
-------------------------------
பொய்த்தல் இறுவாய நட்புக்கள் மெய்த்தாக
மூத்தல் இறுவாய்த் திளைநலந் தூக்கில்
மிகுதி இறுவாய செல்வங்கள் தத்தம்
தகுதி இறுவாய்த் துயிர்.
------------------------------------------------------------------------------------------------
சந்தி
பிரித்து எழுதிய பாடல்:
------------------------------------------------------------------------------------------------
பொய்த்தல் இறுவாய நட்புக்கள்; மெய்த்தாக
மூத்தல் இறுவாய்த்து இளைநலம்; தூக்கில்
மிகுதி இறுவாய செல்வங்கள்; தத்தம்
தகுதி இறுவாய்த்து உயிர்.
------------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
-----------------------
ஆராய்ந்து பார்த்தால், நமது நட்புகள் எல்லாம் பொய்மை ஒழுக்கம் புகும்போது
கெட்டு அழிந்து போகின்றன !
இளமையின் வனப்பு துடிப்பு, ஈர்ப்பு எல்லாமே வாழ்நாளில் நம்
கண்ணுக்கு எதிரிலேயே மூப்பினால் அழிந்து போகின்றன !
ஆசைக்கு ஆட்பட்டு அகலக் கால் வைத்தால், எத்துணைச் செல்வம் இருந்தாலும், அவை அனைத்தும் கெட்டழிந்து போகின்றன !
அதுபோல், மனிதர்களின் உயிர் வாழ்நாள் என்னும்
எல்லையின் இறுதியை அடையும் போது உடலைப் பிரிந்து அழிந்துபோகிறது !
-------------------------------------------------------------------------------------------------
கருத்துச்
சுருக்கம்:
--------------------------------
நண்பர்கள்
தமக்குள் பொய்யொழுக்கம் புகும்போது, அவர் நட்புக் கெடும் ; மூப்புத் தோன்றியதும், இளமை நலம் கெடும் ; மீறிய செயல்களைத் தொடங்கியதும் செல்வம் கெடும் ; வாழ்நாள் எல்லையை அடைந்ததும் உயிரும் கெடும் !
-------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
---------------------------
தூக்கில்
= ஆராந்து பார்த்தால் ; நட்புகள் = நேசங்கள் ; பொய்த்தல் இறுவாய = பொய்யொழுக்கமாகிய இறுதியை உடையன ; இளைநலம் = இளமையின் அழகு ; மெய்த்தாக = கண்ணுக்கு நேராக ; மூத்தல் இறுவாய்த்து = மூப்பாகிய இறுதியை உடையது ; செல்வங்கள் = பொருட்செல்வமும் செல்வாக்கும் ; மிகுதி இறுவாய = மிகையான செயல்களை இறுதியாக உடையன ; உயிர் = மக்கள் உயிர் ; தத்தம் தகுதி இறுவாய்த்து = தத்தமது வாழ்நாள் எல்லையை இறுதியாக
உடையது.
-------------------------------------------------------------------------------------------------
சுருக்கக்
கருத்து:
------------------------------------
நண்பர்கள் தமக்குள் பொய்யொழுக்கம் நேர்ந்ததாயின் அவர் நட்புக் கெடும் ; மூப்புத் தோன்றியதும் இளமை நலம் கெடும் ; மீறிய செயல்களைச் செய்யத் தொடங்கியதும் செல்வம் கெடும் ; வாழ்நாள், எல்லை கண்டதும் உயிர் கெடும் (மடியும்)
----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
“நான்மணிக்கடிகை” வலைப்பூ.
[தி.ஆ:2052,நளி(கார்த்திகை),02]
{18-11-2021}
----------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக