விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு
நூல்களுள் ஒன்று ! இந்நூல்
சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத் தமிழறிஞர். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
-----------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (61)
-------------------------------
இனிதுண்பா னென்பான் உயிர்கொல்லா துண்பான்
முனிதக்கா னென்பான் முகனொழிந் துவாழ்வான்
தனிய னெனப்படுவான் செய்தநன் றில்லான்
இனிய னெனப்படுவான் யார்யார்க்கே யானும்
முனியா ஒழுக்கத் தவன்
-----------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
-----------------------------------------------------------------------------------------------
இனிது உண்பான் என்பான் உயிர்கொல்லாது உண்பான்
முனி தக்கான் என்பான் முகன் ஒழிந்து வாழ்வான்
தனியன் எனப்படுவான் செய்த நன்றி இல்லான்
இனியன் எனப்படுவான் யார்யார்க்கே யானும்
முனியா ஒழுக்கத்தவன்
-----------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
------------------------
பிறஉயிர்களைக் கொல்லாது காய்கறி உணவை உண்பவனே, இனிய உணவை
உண்பவன் என்று உலகத்தால் மதிக்கப்படுகிறவன் ஆகிறான் !
முகமலர்ச்சியின்றி எப்போதும் கடுகடுப்பாய் இருப்பவன் எல்லோராலும்
வெறுக்கப்பட்டு மிகவும் தூற்றப்படுபவன் ஆகிறான்
!
பிறருக்கு நன்மை ஏதும் செய்யாமல் தனக்கெனவே வாழ்கிறவன், உற்றார்,
உறவு, சுற்றம், நட்பு ஏதுமின்றி தனியனாய் வாழ்கிறவன்
ஆகிறான் !
யாராலும் வெறுக்கப்படாத நல்லொழுக்கத்தை உடையவன், இவ்வுலகத்தால்
இனியவன் என்று போற்றப்படுபவன் ஆகிறான் !
------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
---------------------------
இனிது உண்பான் என்பான் = இனிய
உணவை உண்பவன் என்று சொல்லப்படுபவன் ; உயிர்
கொல்லாது = ஓருயிரையுங் கொல்லாது ; உண்பான் = காய்கறி
உணவுகளையே உண்பவனாவான் ; முனிதக்கான் என்பான் = எல்லாரானும்
வெறுக்கத் தக்கவன் என்று சொல்லப்படுபவன் ; முகன் ஒழிந்து = முக மலர்ச்சி
இல்லாமல் ; வாழ்வான் = கடுகடுப்பாய் வாழ்பவனாவான் ; தனியன்
எனப்படுவான் = துணை இல்லாதவன் என்று சொல்லப்படுபவன் ; செய்த நன்று இல்லான் = தன்னாற்
செய்யப்பட்ட நன்மை ஒன்றும் இல்லாதவன் ஆவான் ; இனியன்
எனப்படுவான் = இனியவன் என்று சொல்லப்படுபவன் ; யார்யார்க்கேயானும் = எல்லோராலும் ; முனியா
ஒழுக்கத்தவன் = வெறுக்கப்படாத ஒழுக்கத்தை உடையவனே ஆவான்.
------------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
-------------------------------
ஓருயிரையும் கொல்லாது காய்கறி உணவுகளை உண்பவனே இனிய உணவை
உண்பவனாவான் ; முகமலர்ச்சி இல்லாமல் கடுகடுப்பாய் உயிர்வாழ்வோனெல்லோரானுன் வெறுக்கப்படுவான் ; யார்க்கும்
உதவி செய்யாதவன் துணை இல்லாதவன் ஆவான் ; எவராலும் வெறுக்கத் தகாத ஒழுக்கத்தை உடையவான் இனியவன் என்று சொல்லப்படுவான்.
------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”நான்மணிக்கடிகை” வலைப்பூ,
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),15]
{01-12-2021}
----------------------------------------------------------------------------------------------