விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 1 டிசம்பர், 2021

இனிதுண்பான் என்பான் - பாடல்.61 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்.  இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (61)

-------------------------------

இனிதுண்பா னென்பான் உயிர்கொல்லா துண்பான்

முனிதக்கா னென்பான் முகனொழிந் துவாழ்வான்

தனிய னெனப்படுவான் செய்தநன் றில்லான்

இனிய னெனப்படுவான் யார்யார்க்கே யானும்

முனியா ஒழுக்கத் தவன்

-----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------------

இனிது உண்பான் என்பான் உயிர்கொல்லாது உண்பான்

முனி தக்கான் என்பான் முகன் ஒழிந்து வாழ்வான்

தனியன் எனப்படுவான் செய்த நன்றி இல்லான்

இனியன் எனப்படுவான் யார்யார்க்கே யானும்

முனியா ஒழுக்கத்தவன்

-----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

------------------------

பிறஉயிர்களைக் கொல்லாது காய்கறி உணவை உண்பவனே, இனிய உணவை உண்பவன் என்று உலகத்தால் மதிக்கப்படுகிறவன் ஆகிறான் !

முகமலர்ச்சியின்றி எப்போதும் கடுகடுப்பாய் இருப்பவன் எல்லோராலும் வெறுக்கப்பட்டு மிகவும் தூற்றப்படுபவன் ஆகிறான் !

பிறருக்கு நன்மை ஏதும் செய்யாமல் தனக்கெனவே வாழ்கிறவன், உற்றார், உறவு, சுற்றம், நட்பு  ஏதுமின்றி தனியனாய் வாழ்கிறவன் ஆகிறான் !

யாராலும் வெறுக்கப்படாத நல்லொழுக்கத்தை உடையவன், இவ்வுலகத்தால் இனியவன் என்று  போற்றப்படுபவன் ஆகிறான் !

------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

---------------------------

இனிது உண்பான் என்பான் = இனிய உணவை உண்பவன் என்று சொல்லப்படுபவன்  ; உயிர் கொல்லாது = ஓருயிரையுங் கொல்லாது ; உண்பான் = காய்கறி உணவுகளையே உண்பவனாவான் ; முனிதக்கான் என்பான் = எல்லாரானும் வெறுக்கத் தக்கவன் என்று சொல்லப்படுபவன் ; முகன் ஒழிந்து = முக மலர்ச்சி இல்லாமல் ; வாழ்வான் = கடுகடுப்பாய் வாழ்பவனாவான் ; தனியன் எனப்படுவான் = துணை இல்லாதவன் என்று  சொல்லப்படுபவன்  ; செய்த நன்று இல்லான் = தன்னாற் செய்யப்பட்ட நன்மை ஒன்றும் இல்லாதவன் ஆவான் ; இனியன் எனப்படுவான் = இனியவன் என்று சொல்லப்படுபவன் ; யார்யார்க்கேயானும் = எல்லோராலும் ; முனியா ஒழுக்கத்தவன் = வெறுக்கப்படாத ஒழுக்கத்தை உடையவனே ஆவான்.

------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------------

ஓருயிரையும் கொல்லாது காய்கறி உணவுகளை உண்பவனே இனிய உணவை உண்பவனாவான் ; முகமலர்ச்சி இல்லாமல் கடுகடுப்பாய் உயிர்வாழ்வோனெல்லோரானுன்  வெறுக்கப்படுவான் ; யார்க்கும் உதவி செய்யாதவன் துணை இல்லாதவன் ஆவான் ; எவராலும் வெறுக்கத் தகாத  ஒழுக்கத்தை உடையவான் இனியவன் என்று சொல்லப்படுவான்.

------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),15]

{01-12-2021}

----------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக