விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 13 டிசம்பர், 2021

மடிமை கெடுவார்கண் நிற்கும் - பாடல்.90 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (90)

--------------------------

மடிமை கெடுவார்கண் நிற்கும் கொடுமைதான்

பேணாமை செய்வார்கண் நிற்குமாம் பேணிய

நாணின் வரைநிற்பர் நற்பெண்டிர் நட்டமைந்த

தூணின்கண் நிற்குங் களிறு.

---------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

--------------------------------------------------------------------------------------------

மடிமை கெடுவார்கண் நிற்கும்; கொடுமைதான்

பேணாமை செய்வார்கண் நிற்குமாம்; பேணிய

நாணின் வரை நிற்பர்  நற்பெண்டிர்; நட்டு அமைந்த

தூணின்கண் நிற்கும் களிறு.

--------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

-------------------

கெட்டுப் போகவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால், அந்த மனிதனைச் சோம்பல்  பற்றி நின்று அழித்துவிடும்  !

சான்றோர்  விரும்பாத   செயலெதையும்செய்வதற்குத்  துணிந்தாரைத்   தீமைகள்  சூழ்ந்து  வளரும் !

நல்லியல்பு உடைய நங்கையர் இடத்தில்தான் நாணம் என்னும் பயிர் நாளும் செழித்து ஓங்கும் !

வலிமையுடன் நிலத்தில் நிறுத்தப் பெற்ற தூணில் பிணைக்கப்பட்ட தொடரியில்தான் (சங்கிலி) யானையும் அடங்கி நிற்கும் !

----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

--------------------------

மடிமை = முயற்சியின்மை ; கெடுவார்கண் = கெடுவார் இடத்திலேயே ; நிற்கும் = ஏற்படும் ; கொடுமை = தீமை ; பேணாமை செய்வார்கள் = மேலோர் விரும்பாமையைச் செய்வார் இடத்தில் ; நிற்கும் = உண்டாகும் ; நற்பெண்டிர் = நன்மகளிர் ; பேணிய விரும்பப்பட்ட ; நாணின் வரை = நாணத்தின் எல்லையில் ; நிற்பர் = நிற்பார்கள் ; களிறு = யானை ; நட்டு அமைந்த = கீழே நட்டு வலிவுடன் அமைந்த ; தூணின்கண் = தூண் வலுவில் ; நிற்கும் = நிலை பெறும்.

---------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

----------------------------

கெடுவார் இடத்தில் சோம்பல் இருக்கும் ; சான்றோர் விரும்பாதவற்றைச் செய்வாரிடத்தில் தீமை ஏற்படும் ; நல்லியல்புடைய மகளிர் நாண் எல்லையில் நிற்பர் ; யானை தூண் வலுவில் நிற்கும்.

----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),27]

{13-12-2021}

----------------------------------------------------------------------------------------------