விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத் தமிழறிஞர். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
----------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (90)
--------------------------
மடிமை கெடுவார்கண் நிற்கும் கொடுமைதான்
பேணாமை செய்வார்கண் நிற்குமாம் பேணிய
நாணின் வரைநிற்பர் நற்பெண்டிர் நட்டமைந்த
தூணின்கண் நிற்குங் களிறு.
---------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
--------------------------------------------------------------------------------------------
மடிமை கெடுவார்கண் நிற்கும்; கொடுமைதான்
பேணாமை செய்வார்கண் நிற்குமாம்; பேணிய
நாணின் வரை நிற்பர் நற்பெண்டிர்; நட்டு அமைந்த
தூணின்கண் நிற்கும் களிறு.
--------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
-------------------
கெட்டுப் போகவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால், அந்த
மனிதனைச் சோம்பல் பற்றி
நின்று அழித்துவிடும் !
சான்றோர் விரும்பாத செயலெதையும், செய்வதற்குத் துணிந்தாரைத் தீமைகள் சூழ்ந்து வளரும் !
நல்லியல்பு உடைய நங்கையர் இடத்தில்தான் நாணம் என்னும் பயிர்
நாளும் செழித்து ஓங்கும் !
வலிமையுடன் நிலத்தில் நிறுத்தப் பெற்ற தூணில் பிணைக்கப்பட்ட
தொடரியில்தான் (சங்கிலி) யானையும் அடங்கி நிற்கும் !
----------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
--------------------------
மடிமை = முயற்சியின்மை ; கெடுவார்கண் = கெடுவார்
இடத்திலேயே ; நிற்கும் = ஏற்படும் ; கொடுமை = தீமை ; பேணாமை செய்வார்கள் = மேலோர்
விரும்பாமையைச் செய்வார் இடத்தில் ; நிற்கும் = உண்டாகும் ; நற்பெண்டிர் = நன்மகளிர் ; பேணிய
விரும்பப்பட்ட ; நாணின் வரை = நாணத்தின் எல்லையில் ; நிற்பர் = நிற்பார்கள் ; களிறு = யானை ; நட்டு
அமைந்த = கீழே நட்டு வலிவுடன் அமைந்த ; தூணின்கண் = தூண்
வலுவில் ; நிற்கும் = நிலை பெறும்.
---------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
----------------------------
கெடுவார் இடத்தில் சோம்பல் இருக்கும் ; சான்றோர்
விரும்பாதவற்றைச் செய்வாரிடத்தில் தீமை ஏற்படும் ; நல்லியல்புடைய
மகளிர் நாண் எல்லையில் நிற்பர் ; யானை தூண் வலுவில் நிற்கும்.
----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”நான்மணிக்கடிகை” வலைப்பூ,
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),27]
{13-12-2021}
----------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக