விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 14 டிசம்பர், 2021

வடுச்சொல் நயமில்லார் வாய் - பாடல்.98 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (98)

-------------------------------

வடுச்சொல் நயமில்லார் வாய்த்தோன்றும் கற்றார்வாய்ச்

சாயினுந் தோன்றா கரப்புச்சொல்தீய

பரப்புச்சொல் சன்றோர்வாய்த் தோன்றா கரப்புச்சொல்

கீழ்கள்வாய்த் தோன்றி விடும்.

-----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------------

வடுச்சொல் நயம் இல்லார் வாய்த் தோன்றும்; கற்றார் வாய்ச்

சாயினும் தோன்றா கரப்புச் சொல்; – தீய

பரப்புச் சொல் சான்றோர் வாய்த் தோன்றா; கரப்புச் சொல்

கீழ்கள் வாய்த் தோன்றிவிடும்.

-----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

---------------------

அடுத்தவர் மீது பழியுரைக்கும் அழுக்குப்படிந்த  சொற்கள், அன்பில்லா மக்களின் வாயிலிருந்து அளவில்லாது தோன்றும்!

கறுவம் மிக்க  வஞ்சனைச் சொற்கள், கற்றுணர்ந்த பெருமக்களின் வாயிலிருந்து  ஒருபோதும் தோன்றுவதில்லை!

தீயனவற்றைப் பரப்பும் தெள்ளிமையற்ற சொற்கள், திருப்புகழ் மிக்க சான்றோர் வாயிலிருந்து ஒருநாளும் தோன்றுவதில்லை !

உண்மையை மறைத்துப் பொய்மையை உரைக்கும் ஒளிப்புச் சொற்கள், கீழ்மக்களின் வாயினின்று இடையறாது  தோன்றும் !

----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

----------------------------

வடுச்சொல் = பழிச்சொற்கள் ; நயம் இல்லார் வாய் = அன்பில்லாதாரது வாயில் ; தோன்றும் = பிறக்கும் ; கற்றார் வாய் = அறிவு நூல்களைக் கற்றாரது வாயில் ; கரப்புச் சொல் = வஞ்சனைப் பேச்சுக்கள் ; சாயினும் தோன்றா = அவர் கெடுவதாயினும் பிறவா ; தீய பரப்புச் சொல் = தீயவற்றைப் பரப்புதலால் ஆகும் பேச்சுக்கள் ; சான்றோர் வாய் = மேன்மக்கள் வாயில் ; தோன்றா = தோன்றமாட்டா ; கரப்புச் சொல் = ஒன்றனை மறைத்தற் சொற்கள் ; கீழ்கள் வாய் = கீழ் மக்களது வாயில் ; தோன்றிவிடும் = பிறந்துவிடும்.

-----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------------

அன்பில்லாதார் வாயில் பழிச்சொற்கள் தோன்றும் ; கற்றார் வாயில் வஞ்சனைச் சொற்கள் தோன்றா ; சான்றோர் வாயில் தீயவற்றைப் பரப்பும் சொற்கள் தோன்றா ; கீழ்மக்கள் வாயில் ஒளிப்புச் சொல் தோன்றிவிடும்.

-----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),28]

{14-12-2021}

-----------------------------------------------------------------------------------------------