விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத் தமிழறிஞர். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
----------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (98)
-------------------------------
வடுச்சொல் நயமில்லார் வாய்த்தோன்றும் கற்றார்வாய்ச்
சாயினுந் தோன்றா கரப்புச்சொல் – தீய
பரப்புச்சொல் சன்றோர்வாய்த் தோன்றா கரப்புச்சொல்
கீழ்கள்வாய்த் தோன்றி விடும்.
-----------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
-----------------------------------------------------------------------------------------------
வடுச்சொல் நயம் இல்லார் வாய்த் தோன்றும்; கற்றார்
வாய்ச்
சாயினும் தோன்றா கரப்புச் சொல்; – தீய
பரப்புச் சொல் சான்றோர் வாய்த் தோன்றா; கரப்புச்
சொல்
கீழ்கள் வாய்த் தோன்றிவிடும்.
-----------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
---------------------
அடுத்தவர் மீது பழியுரைக்கும் அழுக்குப்படிந்த சொற்கள், அன்பில்லா
மக்களின் வாயிலிருந்து அளவில்லாது தோன்றும்!
கறுவம் மிக்க வஞ்சனைச் சொற்கள், கற்றுணர்ந்த
பெருமக்களின் வாயிலிருந்து ஒருபோதும்
தோன்றுவதில்லை!
தீயனவற்றைப் பரப்பும் தெள்ளிமையற்ற சொற்கள், திருப்புகழ்
மிக்க சான்றோர் வாயிலிருந்து ஒருநாளும் தோன்றுவதில்லை !
உண்மையை மறைத்துப் பொய்மையை உரைக்கும் ஒளிப்புச் சொற்கள், கீழ்மக்களின்
வாயினின்று இடையறாது தோன்றும் !
----------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
----------------------------
வடுச்சொல் = பழிச்சொற்கள் ; நயம்
இல்லார் வாய் = அன்பில்லாதாரது வாயில் ; தோன்றும் = பிறக்கும் ; கற்றார்
வாய் = அறிவு நூல்களைக் கற்றாரது வாயில் ; கரப்புச்
சொல் = வஞ்சனைப் பேச்சுக்கள் ; சாயினும்
தோன்றா = அவர் கெடுவதாயினும் பிறவா ; தீய பரப்புச்
சொல் = தீயவற்றைப் பரப்புதலால் ஆகும் பேச்சுக்கள் ; சான்றோர்
வாய் = மேன்மக்கள் வாயில் ; தோன்றா = தோன்றமாட்டா ; கரப்புச்
சொல் = ஒன்றனை மறைத்தற் சொற்கள் ; கீழ்கள்
வாய் = கீழ் மக்களது வாயில் ; தோன்றிவிடும் = பிறந்துவிடும்.
-----------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
-------------------------------
அன்பில்லாதார் வாயில் பழிச்சொற்கள் தோன்றும் ; கற்றார்
வாயில் வஞ்சனைச் சொற்கள் தோன்றா ; சான்றோர் வாயில் தீயவற்றைப் பரப்பும் சொற்கள் தோன்றா ; கீழ்மக்கள்
வாயில் ஒளிப்புச் சொல் தோன்றிவிடும்.
-----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”நான்மணிக்கடிகை” வலைப்பூ,
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),28]
{14-12-2021}
-----------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக