விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 17 நவம்பர், 2021

திருவொக்கும் தீதில் ஒழுக்கம் - பாடல்.08 - வை.வேதரெத்தினம் உரை !

பதினெண் கீழ்க் கணக்கு என நமது முன்னோர்களால் வகைப்படுத்தப் பெற்றுள்ள நூல்களுள் ஒன்று நான்மணிக் கடிகை. கடைச் சங்க கால நூலான இதிலிருந்து ஒரு பாடல் !

--------------------------------------------------------------------------------------------

பாடல் (08)

-----------------------

திருவொக்கும் தீதில் ஒழுக்கம்; பெரிய

அறனொக்கும் ஆற்றின் ஒழுகல்; பிறனைக்

கொலையொக்குங் கொண்டுகண் மாறல்;  புலையொக்கும்

போற்றாதார் முன்னர்ச் செலவு.

----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

-------------------------

தீமைபயக்கும்  எண்ணம் துளியும் கலவாத நல்லொழுக்கமானது  கிடைத்தற்கரிய பெரிய செல்வத்துக்கு ஒப்பானது !

 

இல்லற வாழ்க்கையில் நேர்மையுடன் முறையாக ஒழுகுதல் மிகச் சிறந்த அறத்துக்கு ஒப்பானதாகும் !

 

ஒரு மனிதனுடன் நட்புப் பூண்டு ஒழுகிவிட்டு, பிறகு அதை மறந்து அவனைப் பற்றிப் புறங் கூறுதல் அவனைக் கொலை செய்வதற்கு ஒப்பாகும் !

 

அது போல், தம்மை மதியாதாரிடத்திற் சென்று அவரிடம் ஒன்றைக் கேட்டுக் கெஞ்சுதல்  என்பது மிக மிக இழிய செயலுக்கு ஒப்பாகும் !

---------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

---------------------------------

திரு ஒக்கும் = கிடைத்தற்கரிய செல்வத்திற்கு ஒப்பானது; ஆற்றின் ஒழுகல் = வாழ்க்கையில் நேர்மையுடன் முறையாக ஒழுகுதல்; பிறனை = ஒரு மனிதனை; கொலை ஒக்கும் = கொலை செய்வதற்கு ஒப்பாகும்; கொண்டு = நட்புக் கொண்டு ; கண் மாறல் = பின்பு நட்பை மறந்து புறங்கூறல்; புலை  ஒக்கும் = மிக மிக இழிந்த செயலுக்கு ஒப்பாகும்; போற்றாதார் = நம்மை மதியாதார் ; முன்னர்ச் செலவு = முன்பாகச் சென்று உதவி கேட்டுக் கெஞ்சுதல்.

---------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

---------------------------------------

நல்லொழுக்கம்  செல்வம் போன்றது; முறையான இல்லற ஒழுக்கம் துறவறத்தைப் போன்றது; பிறரைப்  புறங்கூறல் அவரைக் கொலை செய்வதற்கு ஒப்பானது; தம்மை மதியாரை தாம் மதித்தல் இழிதகைமை ஆகும் !


----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),01]

{17-11-2021}

-----------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக