முழுவதும் வெண்பாக்களால் மட்டுமே யாக்கப் பெற்ற நான்மணிக்கடிகை, விளம்பி
நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பெற்ற நூல். கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய இந்நூல்
ஒவ்வொரு பாடலிலும் நான்கு நான்கு கருத்துகளைச் சொல்கிறது ! இதிலிருந்து
ஒரு பாடல் !
---------------------------------------------------------------------------------------------
பாடல்; எண் (09)
-----------------------------------
கள்வமென் பார்க்குந் துயிலில்லை காதலிமாட்டு
உள்ளம்வைப் பார்க்குந் துயிலில்லை; ஒண்பொருள்
செய்வமென் பார்க்குந் துயிலில்லை; அப்பொருள்
காப்பார்க்கும் இல்லை துயில்.
---------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
----------------------------------------------------------------------------------------------
கள்வம் என்பார்க்கும் துயிலில்லை; காதலிமாட்டு
உள்ளம் வைப்பார்க்கும் துயிலில்லை; ஒண்பொருள்
செய்வம் என்பார்க்கும் துயிலில்லை; அப்பொருள்
காப்பார்க்கும் இல்லை
துயில்.
----------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
----------------------
திருடுவதற்காக ஊர் அரவம் அடங்கும்
வரைக் காத்திருப்பார்க்கும் உறக்கம் வாராது !
காதலில் கட்டுண்டுக் காதலியின்
இடத்தில் மனதைப்
பறிகொடுத்தவர்களுக்கும் உறக்கம் வாராது !
நிறைந்த செல்வம் சேர்க்கவேண்டும் என்று கருதி
இராப் பகலாய் உழைப்பவர்களுக்கும் உறக்கம்
வாராது !
அதுபோல், சேர்த்த பொருளை, களவாலும்
பிறவாற்றாலும் கெடாதபடிக் காப்பவர்களுக்கும் கவலையால் உறக்கம் வாராது !
----------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
-----------------------------------
கள்வம் என்பார்க்கும் = திருடுவம்
என்று மக்கள் சோர்ந்திருக்கும் நேரம் பார்ப்பார்க்கும் ; காதலி மாட்டு =
காதலியினிடத்தில் ; உள்ளம் வைப்பார்க்கும் = விருப்பம் வைத்திருப்பார்க்கும் ; ஒண்பொருள்
= சிறந்த செல்வப் பொருளை ; செய்வம் என்பார்க்கும் = பெருக்குவம் என்று கருதி
உழைப்பார்க்கும் ; அப்பொருள் = தேடிய அப்பொருளை ; காப்பார்க்கும் = களவாலும்
பிறவாற்றாலும் கெடாதபடிப் பாதுகாப்பவர்கட்கும் ; துயில் இல்லை = உறக்கம்
பிடிப்பதில்லை.
-------------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
--------------------------------
திருடர்க்கும்,
காதலியிடம் மனதைப் பறிகொடுத்த ஆடவர்க்கும்,
பொருள் தேடுவார்க்கும், அப்பொருளைப் பாதுகாப்பார்க்கும் இரவில் தூக்கம் வராது தவிப்பார்கள்.
-------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
“நான்மணிக்கடிகை” வலைப்பூ.
[தி.ஆ:2052,நளி(கார்த்திகை),01]
{17-11-2021}
-------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக