முற்றிலும் வெண்பாக்களால் யாக்கப் பெற்ற நூல்
நான்மணிக்கடிகை. கடவுள்
வாழ்த்து உள்பட இந்நூலில் மொத்தம் 106 செய்யுள்கள் உள்ளன . கடைச்சங்க
காலத்ததான இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கு வகையைச் சார்ந்தது ! இதிலிருந்து
ஒரு பாடல் !
----------------------------------------------------------------------------------------------
பாடல்: எண் (13).
-------------------------------
கன்றாமை வேண்டுங் கடிய பிறர்செய்த
நன்றியை நன்றாக் கொளல்வேண்டும் – என்றும்
விடல்வேண்டுந் தங்கண் வெகுளி அடல்வேண்டும்
ஆக்கஞ் சிதைக்கும்
வினை.
-----------------------------------------------------------------------------------------------
பொருள்:
-------------------
பிறர் செய்கின்ற அஞ்சத்தக்கக, கடுஞ் செயல்களை நினைந்து
நினைந்து மனதில் கறுவாமை (மன வயிரம் கொள்ளாதிருத்தல்) வேண்டும் !
பிறர் நமக்குச்
செய்யும் நன்மைகளை
ஒருபோதும்
மறவாமல் என்றும் நன்றியுடன் நினைவில்
இருத்திக் கொள்ள வேண்டும் !
காரணம் எதுவாயினும், நம்மிடம் உண்டாகும் பெரும்
சினத்தை வளரவிடாமல்
மனதைவிட்டு நீக்குதல் வேண்டும் !
அதுபோல், முற்போக்கான செயல்களைக் கெடுத்து அழித்துவிடும்
தவறான முயற்சிகளை முற்றாக ஒழித்துவிட வேண்டும் !
------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
------------------------------
கடிய = பிறர்
செய்கின்ற அஞ்சத்தக்க கடுஞ் செயல்களை ; கன்றாமை வேண்டும் = நினைந்து நினைந்து
கறுவாமை வேண்டும் ; பிறர் செய்த நன்றியை = பிறர் செய்யும் நன்மைகளை ; நன்றா =
பெரிதும் ; கொளல் வேண்டும் = நினைவிலிருத்தல் வேண்டும் ; தங்கண் வெகுளி = தம்மிடம்
உண்டாகும் பெருஞ் சினத்தை ; என்றும் = எப்பொழுதும் ; விடல் வேண்டும் = நீக்குதல்
வேண்டும் ; ஆக்கம் = முற்போக்கை ; சிதைக்கும் வினை = கெடுக்கும் தொழிலை ; அடல்
வேண்டும் = ஒழித்தல் வேண்டும்.
-------------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
-----------------------------
பிறர் செய்த தீமைகட்காக அவரைக் கறுவாமை வேண்டும்; ஆனால் அவர் செய்த நன்மைகளை மறவாமை வேண்டும்; சினத்தைக் கைவிடல் வேண்டும்; முற்போக்கைத் தடுக்கும் தவறான செயல்களை ஒழித்துவிட வேண்டும் !
------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
“நான்மணிக்கடிகை” வலைப்பூ.
[தி.ஆ:2052,நளி(கார்த்திகை),02]
{18-11-2021}
-------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக