விளம்பி
நாகனார் இயற்றிய நான்மணிக் கடிகை, கடைச்சங்க காலத்திய நூல். இதில் கடவுள் வாழ்த்து உள்பட 106 பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துகள்
வலியுறுத்தப்படுகின்றன ! இந்நூலிலிருந்து ஒரு பாடல் !
-----------------------------------------------------------------------------------------------
பாடல்:எண்.(14).
------------------------------
பல்லினான்
நோய் செய்யும் பாம்பெலாங் – கொல்லேறு
கோட்டால்
நோய்செய்யுங் குறித்தாரை ஊடி
முகத்தான்
நோய்செய்வர் மகளிர் முனிவர்
தவத்தால் தருகுவர் நோய்.
-----------------------------------------------------------------------------------------------
சந்தி
பிரித்து எழுதிய பாடல்:
-----------------------------------------------------------------------------------------------
பல்லினால் நோய்செய்யும் பாம்புஎலாம்; – கொல் ஏறு
கோட்டால் நோய்செய்யும் குறித்தாரை; ஊடி
முகத்தால்
நோய்செய்வர் மகளிர்; முனிவர்
தவத்தால்
தருகுவர் நோய்.
-----------------------------------------------------------------------------------------------
பொருள்:
--------------------
பாம்புகள் தம் உயிருக்கு அச்சுறுத்தல்
ஏற்பட்டால் , பிற உயிர்களுக்குத் தம் நச்சுப் பற்களால் துன்பம் தரும் !
சீண்டப் பெறும் காளை, தான்
குறி வைத்துவிட்டால், குறிப்பிட்ட மனிதருக்குத் தன் கூரிய
கொம்புகளால் துன்பம் தரும் !
பெண்மக்கள், ஊடல் கொண்டு பிணங்கி, தம் முகக் குறிப்பினால் ஆடவர்க்குத்
துன்பம் தருவர் !
அதுபோல், முனிவர்கள் சினம் கொண்டால், தம்மை இகழ்ந்தவர்களுக்குத் தமது தவ வலிமையால், துன்பம் தருவர் !
-----------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
-----------------------------
பாம்பு எலாம் = எல்லாப் பாம்புகளும் ; பல்லினால் நோய்
செய்யும் = பிறர்க்குப் பல்லினால் துன்பம் தரும் ; கொல் ஏறு = கொலை பயிலும் காளை
மாடு ; குறித்தாரை = தன்னால் குறித்துக் கொள்ளப்பட்டவர்க்கு ; கோட்டால் = கொம்புகளால் ; நோய் செய்யும் = துன்பம் தரும் ;
மகளிர் = பெண் மக்கள் ; ஊடி = பிணங்கி ; முகத்தால் = தம் முகக் குறிப்பினால் ;
நோய் செய்வர் = துன்பம் தருவர் ; முனிவர் = தவமுடையார் ; தவத்தால் = தமது தவ
வலிமையால் ; நோய் தருகுவர் = துன்பம் தருவர்.
-----------------------------------------------------------------------------------------------
சுருக்கக்
கருத்து:
------------------------------
பாம்பு பல்லாலும், காளை கொம்பாலும், மகளிர் முகத்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்வர்; முனிவர் தவத்தால் துன்பம் தருவர் !
------------------------------------------------------------------------------------------------
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
“நான்மணிக்கடிகை” வலைப்பூ.
[தி.ஆ:2052,நளி(கார்த்திகை),02]
{18-11-2021}
-----------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக