விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 18 நவம்பர், 2021

பறை நன்று பண் அமையா யாழின் - பாடல்.15 - வை.வேதரெத்தினம் உரை !

ஒவ்வொரு பாடலிலும் நந்நான்கு கருத்துகளை உள்ளடக்கியது நான்மணிக் கடிகை ! கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய இந்நூலை இயற்றியவர் விளம்பி நாகனார் என்னும் பெரும்புலவர் !. இதிலிருந்து ஒரு பாடல் !

-------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்.(15)

----------------------------

பறைநன்று  பண்ணமையா  யாழின்  நிறைநின்ற

பெண்ணன்று  பீடிலா  மாந்தரின்  பண்ணழிந்து

ஆர்தலின் நன்று பசித்தல்  பசைந்தாரின்

தீர்தலின்  தீப்புகுதல்  நன்று.

-------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

----------------------

செவிகளுக்கு இனிமை உணர்வைத் தரும் பண்ணிசை அமையாத யாழைவிடப் பேரோசை எழுப்பும் பறை நல்லது !

பெருந்தன்மை  இல்லாத ஆண் மக்களைவிட, அடக்கம் மிகுந்த கற்பரசிகளான பெண் மக்கள் நல்லவராவார் !

ஆக்கிய உணவு ஆறிப் பதனழிந்த பிறகு அதை  உண்பதைவிடப் பசியால் வருந்தித் துன்பப்படுதல் நல்லது   !

அதுபோல், நம்மை விரும்பி  அன்பு செலுத்துபவர்களை விட்டு நீங்கி வாழ்வதைவிட எரியில் வீழ்ந்து உயிர்விடுதல் மிகவும் நல்லது !

-------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

----------------------------

பண் அமையா = பண்ணிசை அமையாத ; யாழின் = “யாழ்” என்னும் இன்னிசைக் கருவியினும் ; பறை நன்று = “பறை” என்னும் பேரோசைக் கருவி நன்றாம் ; பீடு இலா = பெருந்தன்மை அமையாத ; மாந்தரின் = ஆண் மக்களினும் ; நிறை நின்ற = கற்பில் நின்று அடக்கமுடைய ; பெண் நன்று = பெண் மக்கள் நல்லர் ; பண் அழிந்து = பதங்கெட்டு ; ஆர்தலின் = உண்டலினும் ; பசித்தல் நன்று = பசியுடன் வருந்துதல் நன்று ; பசைந்தாரின் = தம்மை விரும்பினாரினின்றும் ; தீர்தலின் = நீங்கி உயிர் வாழ்தலை விட ; தீப்புகுதல் நன்று = எரியில் வீழ்ந்து உயிர் விடுதல் நல்லது

-------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-----------------------------

பறை, இசையமையா யாழினும் மேல்;  கற்பமைந்த பெண்டிர், வினைத்திறன் அறியா ஆடவரினும் மேல்; பசித்தல், பண்டங்களைப் பதங்கெட உண்ணலினும் மேல் ; தீப்புகுதல், விரும்பினாரை நீங்கி வாழ்தலினும் மேல் ஆகும் !

-------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),02]

{18-11-2021}

-------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக