நாகனார்
என்னும் பெரும்புலவர் விளம்பி
என்னு ஊரைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. இதனால் விளம்பி நாகனார் என அவர்
அழைக்கப்படுகிறார் !
இற்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இயற்றிய நான்மணிக்கடிகை என்னும் நூல் பல அரிய
கருத்துகளை நமக்கு எடுத்துரைக்கிறது ! அதிலிருந்து ஒரு பாடல் !
-----------------------------------------------------------------------------------------------
பாடல்
எண்: (17)
------------------------------
இன்னாமை
வேண்டின் இரவெழுக; இந்நிலத்து
மன்னுதல்
வேண்டின் இசைநடுக; - தன்னோடு
செல்வது
வேண்டின் அறஞ்செய்க; வெல்வது
வேண்டின் வெகுளி விடல்.
-----------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
----------------------
இழிவானவன் என்னும் பெயரைத் தேடிக் கொள்ள எவனொருவன்
விரும்புகிறானோ அவன் தன்னிடம் போதுமான செல்வம் இருந்தும் கூட பேராசை மீக்கூரப் பிச்சை எடுக்கும் தொழிலை மேற்கொள்ளலாம் !
இந்த உலகத்தில் என்றென்றும் நிலைபெற்று விளங்குதலை எவனொருவன் விரும்புகிறானோ, அவன் புகழ் விளைக்கும் செயல்களை மேற்கொள்ளலாம் !
தான் செல்லுமிடமெல்லாம் தனக்குத் துணையாக
ஒரு பாதுகாப்புக் கவசம் தேவை என்று எவனொருவன் விரும்புகிறானோ, அவன்
அறச் செயல்களில் ஈடுபடுவதை மேற்கொள்ளலாம் !
அதுபோல், பிறரை வெற்றி கொண்டு தன்பால்
ஈர்த்துக் கொள்ள எவனொருவன் விரும்புகிறானோ, அவன் சினம் (கோபம்) கொள்வதை முற்றிலுமாக விட்டுவிடல் வேண்டும் !
-------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
-------------------------------
இன்னாமை
வேண்டின் = இழிவை ஒருவன் விரும்பினால் ; இரவு எழுக = இரந்து (பிச்சை எடுத்து) உண்பதை மேற்கொள்க ; இந்நிலத்து = இவ்வுலகில் ; மன்னுதல் வேண்டின் = நிலையான பெயர் பெற்று விளங்க
விரும்பினால் ; இசை நடுக = புகழ் தரும் செயல்களில் ஈடுபடுக ; தன்னோடு செல்வது வேண்டின் = தன்னுடன் துணையாகச் செல்வதொன்றை
விரும்பினால் ; அறம் செய்க = அறச் செயல்களை மேற்கொள்க ; வெல்வது வேண்டின் = பிறரை வெல்ல விரும்பினால் ; வெகுளி விடல் = சினம் (கோபம் ) கொள்வதை விட்டுவிடுக.
-------------------------------------------------------------------------------------------------
சுருக்கக்
கருத்து:
--------------------------------
இழிவை
விரும்பினால் இரந்துண்க ; அழியாமை
வேண்டினால் புகழ் தரும் செயல்களைப் புரிக ; உறுதுணையை வேண்டினால் அறம் செக ; வெல்லல்
விரும்பினால் வெகுளியைக் கைவிடுக !
---------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
“நான்மணிக்கடிகை” வலைப்பூ.
[தி.ஆ:2052,நளி(கார்த்திகை),02]
{18-11-2021}
----------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக