முற்றிலும் வெண்பாக்களால் ஆன 106 பாடல்களைக்
கொண்ட நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! கி.பி 2-ஆம்
நூற்றாண்டு வாக்கில் தோன்றிய இந்நூலை
விளம்பி நாகனார் என்னும் பெரும்புலவர் படைத்துள்ளார். அதிலிருந்து
ஒரு பாடல் !
-------------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (20).
--------------------------
மனைக்காக்கம் மாண்ட மகளிர்; ஒருவன்
வினைக்காக்கஞ் செவ்விய னாதல் - சினச்செவ்வேல்
நாட்டாக்கம் நல்லனிவ் வேந்தென்றல் கேட்டாக்கம்
கேளிர் ஒரீஇ விடல்.
-------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------
மனைக்குஆக்கம் மாண்ட மகளிர்; ஒருவன்
வினைக்குஆக்கம் செவ்வியன் ஆதல்; - சினச்செவ்வேல்
நாட்டுஆக்கம் நல்லன் இவ்வேந்து என்றல்; கேட்டுஆக்கம்
கேளிர் ஒரீஇ
விடல்.
-------------------------------------------------------------------------------------------------
பொருள்:
---------------
நற்பண்புகளும் நல்லியல்புகளும் நிறைந்த பெண்மக்களைப்
பெற்றிருத்தல் ஒரு
ஆடவனின் இல்லற
வாழ்வுக்கு உயர்வைத்
தரும் !
வீரனொருவன் படைப்பயிற்சியில் தேர்ச்சி உடையவனாய் இருத்தல் போர் முதலிய ஆள்வினைகட்கு மிகுந்த
உயர்வைத் தரும் !
நாடாளும் வேந்தன் நல்லவன் என்று குடிமக்களால் பாராட்டப்படுதல், அந்த நாட்டுக்கு உயர்வை தரும் !
அதுபோல்,
சுற்றத்தாரைச் சுமையாக எண்ணி அவர்களைத் தன்னிடம் அண்டவிடாமல்
விலக்கி வைத்தல், மனிதனின்
கேட்டுக்கு வழிவகுத்துவிடும்
!
-------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
--------------------------------------
மாண்ட மகளிர் = பெருமைப்படத் தக்க பெண்மக்கள் ; மனைக்கு ஆக்கம்= மனை
வாழ்வுக்கு உயர்வைத் தரும்;
ஒருவன்=வீரன் ஒருவன்; சினச் செவ்வேல்= கூரிய
வேல்; செவ்வியன் ஆதல் = தேர்ச்சி
உடையவன் ஆதல்; வினைக்கு ஆக்கம்= போர்
முதலிய வினைகளுக்கு
உயர்வு தரும் ; இவ்வேந்து = இந்த அரசன்; நல்லன்
என்றல் = நல்லவன் என்று குடிமக்களாற் பாராட்டப் பெறுதல்; நாடு
ஆக்கம் = நாட்டுக்கு உயர்வு தரும்; கேளிர்=சுற்றத்தார்; ஒரீஇ
விடல்= விலக்கி விடுதல்; கேடு
ஆக்கம் = கேட்டுக்கு வழி வகுக்கும்.
-------------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
-------------------------------
நன்மகளிர் மனை வாழ்க்கையையும், படைப்பயிற்சி உடையான் போர்
வினை வெற்றியையும், செங்கோலரசன் நாட்டினையும் உயர்வாக்குவர்; உறவினரை ஒதுக்குதல் கேட்டினைப் பெருக்கும் !
-------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
“நான்மணிக்கடிகை” வலைப்பூ.
[தி.ஆ:2052,நளி(கார்த்திகை),03]
{19-11-2021}
-------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக