விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 20 நவம்பர், 2021

இரும்பின் இரும்பிடை போழ்ப - பாடல்.36 - வை.வேதரெத்தினம் உரை !

 

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக் கடிகை, பதினெண் கீழ்க்கணக்கு நூல் வகையைச்  சார்ந்தது . கடைச்சங்க கால இலக்கியமான இதில் 106 செய்யுள்கள் உள்ளன. அனைத்தும் வெண்பாக்களால் ஆனவை ! இதிலிருந்து ஒரு பாடல் !

 

-----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (36)

------------------------

 

இரும்பின்  இரும்பிடை  போழ்ப  -  பெருஞ்சிறப்பின்

நீருண்டார்  நீரான்  வாய்பூசுப  -  தேரின்

அரிய அரியவற்றாற்  கொள்ப  -  பெரிய

பெரியரான்  எய்தப்  படும்.

 

------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

---------------------

இரும்பினாற் செய்யப் பெற்ற  உளி, வெட்டிரும்பு, கொடிறு, சுத்தியல் போன்ற கருவிகளைக் கொண்டே  அதே  இரும்பை வெட்டித்  துண்டாக்குகின்றனர் !

 

நீர்கலந்த   உணவுகளான,  பாற்சோறு, கன்னலமுது (பாயசம்), பழையசோறு போன்றவற்றை  உண்போர், அதே நீர் கொண்டே தம் வாயைக் கழுவித்  தூய்மை  ஆக்குகின்றனர் !

 

செய்து முடிப்பதற்கு  மிகவும்  கடினமான அரிய செயல்கள் பலவும்  ஊக்கமுடையவர்களின் அரிய முயற்சிகளால் தான் இவ்வுலகில் செய்து முடிக்கப் பெறுகின்றன !

 

அதுபோல், பட்டம், பதவி, பாராட்டு  போன்ற பெரிய பேறுகள் எல்லாம்  பெரிய மனிதர்களால் தான் அடையப் பெறுகின்றன !

 

------------------------------------------------------------------------------------------------

சொற்பொருளுரை:

-----------------------------

இரும்பின் = இரும்பினாற் செய்யப் பெற்ற கருவிகளாலேயே ; இரும்பு = இரும்பினை ; இடை போழ்ப = குறுக்கே வெட்டித் துண்டாக்குவர் ;  பெரும் சிறப்பின் = மிக்க சிறப்புடைய ; நீர் உண்டார் = நீர் கலந்த பாற் சோறு போன்ற உணவுகளை உண்பவர்கள் ; நீரால் = நீரைக் கொண்டே ; வாய் பூசுப = வாயைக் கழுவிக் கொள்வர் ; தேரின் = ஆராய்ந்து பார்த்தால் ; அரிய = அரிய செயல்கள் ; அரியவற்றான் = அருமையான முயற்சிகளால் ; கொள்ப = முடித்துக் கொள்வர் ; பெரிய = பெரிய பேறுகள் ; பெரியரான் = கல்வி கேள்விகளையுடைய பெரியோர்களால் ; எய்தப்படும் = அடையப்படும்.

 

------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------

இரும்புக் கருவிகளால் இரும்பை வெட்டுவர்; நீருணவுகளை உண்டார் நீரினால் வாய் கழுவுவர்; அரிய செயல்களை அரிய முயற்சியாற் கொள்வர்; பெரிய பேறுகளைப் பெரியோர் எய்துவர்.


------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),04]

{20-11-2021}

------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக