பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று நான்மணிக் கடிகை ! ஒவ்வொரு செய்யுளிலும் நந்நான்கு கருத்துகளைச் சொல்வதால் நான்கு மணிகளைக் கோத்த ஆரம் என்னும் பொருளில் நான்மணிக் கடிகை என்று வழங்கப்படுகிறது ! இதிலிருந்து ஒரு பாடல் !
------------------------------------------------------------------------------------------------
பாடல்: எண் (37).
----------------------------
மறக்களி மன்னர் முன் தோன்றும் சிறந்த
அறக்களி இல்லாதார்க் கீயுமுன் தோன்றும்
வியக்களி நல்கூர்ந்தார் மேற்றாங் கயக்களி
ஊரில் பிளிற்றி விடும்.
------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
------------------------------------------------------------------------------------------------
மறக்களி மன்னர் முன் தோன்றும்; சிறந்த
அறக்களி இல்லாதார்க்கு ஈயும் முன் தோன்றும்;
வியக்களி நல்கூர்ந்தார் மேல் தாம்
; கயக்களி
ஊரில் பிளிற்றி விடும்.
------------------------------------------------------------------------------------------------
பொருளுரை:
--------------------
செயற்கரிய செயல்களைச் செய்தமையால் ஒரு வீரனுக்கு உண்டாகும் வீரக்களிப்பு,
மன்னருக்கு முன்பாக அவன் நிற்கும் போது தோன்றும் !
ஈகையால் ஏற்படும் அறக்களிப்பு,
ஏதுமற்ற வறியவர்களுக்குத் தன்னால்
இயன்றதைத் தருகையில், கொடுப்பவர்களுக்குத் தோன்றும் !
எதிர்பாராத நேரத்தில்,
தனக்கு ஒன்று கிடைக்கும் போது , வியப்பால்
ஏற்படக் கூடிய வியக்களிப்பு, வறிவர்கள்பால்
தோன்றும் !
அதுபோல்,
பேனைப் பெருமாள் ஆக்கி ஊரெல்லாம் தம்பட்டம் அடித்துத் தற்பெருமை பேசும் கயக்களிப்பு கீழ்மக்களிடத்தின் தான் தோன்றும்
!
------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
-----------------------
மறக்களி
= வீரக்களிப்பு ; மன்னர் முன் = அரசர்கட்கு முன்
; தோன்றும் = வீரர்கட்கு உண்டாகும் ; சிறந்த
அறக்களி = மிக்க ஈகைக் களிப்பு ; இல்லாதார்க்கு
= வறிவர்கட்கு ; ஈயும் முன் = ஒன்று கொடுக்குமிடத்து
; தோன்றும் = கொடுப்பார்க்கு உண்டாகும் ; வியக்களி
= யாதானும் ஒன்றைப் பெறுகையில் வியப்பால் ஏற்படும் களிப்பு
; நல்கூர்ந்தார் மேற்றாம்
= வறிஞர்கள்பால் உண்டாகும் ; கயக்களி = கீழ்மை இயல்பால்
உண்டாகும் களிப்பு ; ஊரில் = இருக்கும் ஊரில் ; பிளிற்றிவிடும்
= பலரும் அறிய ஆரவாரித்தலால் உண்டாகும்.
------------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
-------------------------
அரசனுக்கு முன்னால் பெரும் போழ்து
வீரர்கட்கு வீரக் களிப்பு உண்டாகும்; வறியார்க்கு
ஒன்று ஈவதே செல்வர்கட்கு உண்மையான
ஈகைக் களிப்பாம்; ஒன்றைப் பெற்று வியக்கும் களிப்பு ஏழைகட்கு உண்டு; கீழ்மகனது
கீழ்மையாலான களிப்பு ஊரெல்லாம் தெரிவித்து ஆரவாரம் செய்தலே ஆகும்.
------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
“நான்மணிக்கடிகை” வலைப்பூ.
[தி.ஆ:2052,நளி(கார்த்திகை),04]
{20-11-2021}
------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக