நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! விளம்பி
நாகனார் இயற்றிய இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல்
தோறும் நான்கு கருத்துகளை
நாகனார் வலியுறுத்துகிறார். இதோ
உங்களுக்காக ஒரு பாடல்
!
-------------------------------------------------------------------------------------------
பாடல்
எண்: (49)
--------------------------
மழையின்றி
மாநிலத்தார்க் கில்லை, மழையும்
தவமிலார் இல்வழி
இல்லை, தவமும்
அரச னிலாவழி
இல்லை, அரசனும்
இல்வாழ்வார்
இல்வழி யில்.
----------------------------------------------------------------------------------------------
சந்தி
பிரித்து எழுதிய பாடல்:
-----------------------------------------
மழை இன்றி
மாநிலத்தார்க்கு இல்லை, மழையும்
தவம் இலார்
இல்வழி இல்லை, தவமும்
அரசன் இலாவழி
இல்லை அரசனும்
இல்வாழ்வார்
இல்வழி இல்.
-----------------------------------------------------------------------------------
கருத்துரை:
--------------------
இப்பூவுலகத்தில்
உயிர்கள் செழித்து வளர உதவுகின்ற மழை
இல்லாவிட்டால் மக்களுக்கு நல்வாழ்வு என்பது ஒருநாளும் இல்லை !
அம்மழையும்,
தன்னலம் துறந்து பிறர் நலம் நாடும் நல்லவர்கள் இல்லாத ஊர்களில்
(தவம் இலார்) பெய்வதே இல்லை !
அத்தகைய நல்லவர்களும் நெறி தவறாது இருத்தல் என்பது முறை தவறாத ஆட்சியாளர்கள் இல்லாத நாட்டில் இயல்வதும்
இல்லை !
அதுபோல்,
நல்ல குடிமக்கள் இல்லாத நாட்டில் முறை தவறா ஆட்சியாளர்களும் ஆட்சிக்கு வர முடிவதும்
இல்லை !
-----------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
----------------------------
மழையின்றி
= மழையில்லாமல் ; மாநிலத்தார்க்கு = இப்பேருலகத்தின்
மக்கட்கு ; இல்லை = நலமில்லை ; மழையும்
= அம்மழை தானும் ; தவம் இலார் = தவம் செய்தல்
இல்லாதவர்கள் ; இல்
வழி = இருப்பிடங்களில் ; இல்லை
= பெய்தலில்லை ; தவமும் = அவ்வியல்பினதான தவம் செய்தலும் ; அரசன்
இலாவழி = செங்கோலரசன் இல்லாதவிடத்து ; இல்லை
= நிகழ்தலில்லை ; அரசனும் = அச்செங்கோலரசனும்
; இல்வாழ்வார் = குடிமக்கள் ; இல்வழி
= இல்லாதவிடத்து ; இல் = இலன் ஆவான்.
-----------------------------------------------------------------------------------
சுருக்கக்
கருத்து:
-----------------------------
மழை இல்லாவிட்டால்
உலகத்து மக்களுக்கு நலமில்லை; அம்மழையும் தவமுடையார் இல்லாதவிடத்துப் பெய்தல் இல்லை;
அத் தவம் செய்தலும் முறையான அரசன் இல்லாத நாட்டில் நிகழ்தல் இல்லை;
அவ்வரசனும் குடிகள் இல்லாதவிடத்தில் இருப்பதில்லை !
--------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”நான்மணிக்கடிகை” வலைப்பூ,
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),13]
{29-11-2021}
--------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக