நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! விளம்பி
நாகனார் இயற்றிய இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல்
தோறும் நான்கு கருத்துகளை
வலியுறுத்துகிறார்
இந்தத் தமிழறிஞர். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
------------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (53)
-------------------------------
எள்ளற் பொருள திகழ்தல் ஒருவனை
உள்ளற் பொருள துறுதிச்சொல் – உள்ளறிந்து
சேர்தற் பொருள தறநெறி பன்னூலுந்
தேர்தற் பொருள பொருள்.
------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
------------------------------------------------------------------------------------------------
எள்ளல் பொருளது இகழ்தல், ஒருவனை
உள்ளல் பொருளது உறுதிச் சொல் – உள் அறிந்து
சேர்தல் பொருளது அறநெறி, பல் நூலும்
தேர்தல் பொருள பொருள்.
------------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
----------------------
ஒவ்வொரு மனிதனும் தன்னிடமிருந்து நீக்கவேண்டியது, பிறரை
இகழ்வாகப் பேசுகின்ற தீயசெயலை !
ஒவ்வொரு மனிதனும் தயக்கமின்றி ஏற்க வேண்டியது, கற்றறிந்த
சான்றோர்களின் நல்லுரையை !
ஒவ்வொரு மனிதனும் உய்த்துணர்ந்து கடைப்பிடித்து ஒழுக வேண்டியது, நலந்தரும் நல்வழியாம் அறவழியை !
அதுபோல், எத்தனை நூல்களைப் படித்தாலும் நாம் அறியவேண்டியது, அந்நூல்கள்
நமக்குரைக்கும் மெய்ப்பொருளை !
------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
-----------------------------
ஒருவனை = பிறனொருவனை ; இகழ்தல் = இகழும்
செயல் ; எள்ளற் பொருளது = யாவராலும்
நீக்குதற்குரியது ; உறுதிச் சொல் = ஒருவன் கூறும் உறுதிச்
சொல் ; உள்ளற்
பொருளது = ஏற்றுக் கொள்ளற்குரியது ; அறநெறி = அறவழி ; உள் அறிந்து = ஒருவன்
உள்ளத்தில் தெளிந்து ; சேர்தற் பொருளது = அடைதற்குரியது ; பொருள் = மெய்ப்பொருள்கள் ; பல் நூலும் = அமைவுடைய
பல நூல்களையும் ; தேர்தற் பொருள் = ஆராய்ந்து
தெளிதற்குரியன.
-------------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
-------------------------------
ஒருவனால் நீக்கப்பட வேண்டியது பிறரை இகழும் செயல்; ஏற்கப்
பட வேண்டியது பெரியோர்கள் கூறும் நல்லுரை; தெளிவாகக்
கடைப்பிடிக்க வேண்டியது அறவழி ; அதுபோல், நூல்களைப் படித்து அறியப்பட வேண்டியது அந்நூல்கள் உரைக்கும்
மெய்ப்பொருள்.
------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”நான்மணிக்கடிகை” வலைப்பூ.
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),14]
{30-11-2021}
------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக