நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! விளம்பி
நாகனார் இயற்றிய இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல்
தோறும் நான்கு கருத்துகளை
வலியுறுத்துகிறார்
இந்தத் தமிழறிஞர். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
-------------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (54)
--------------------------------
யாறுள் அடங்குங் குளமுள வீறுசால்
மன்னர் விழையுங் குடியுள – தொன்மரபின்
வேதம் உறுவன பாட்டுள வேளாண்மை
வேள்வியோ டொப்ப உள.
------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
------------------------------------------------------------------------------------------------
யாறுள் அடங்கும் குளம் உள, வீறு
சால்
மன்னர் விழையும் குடி உள – தொல்
மரபின்
வேதம் உறுவன பாட்டு உள, வேளாண்மை
வேள்வியோடு ஒப்ப உள.
-----------------------------------------------------------------------------------
கருத்துரை:
---------------------
ஆற்று வெள்ளம் முழுவதையும் உள்வாங்கிக் கொள்ள அளவுக்குப்
பெரிய குளங்களும் இவ்வுலகில் உள்ளன !
நாடாளும் மன்னர் விரும்பக் கூடிய அளவுக்குக் கற்றறிந்து துறைபோகிய
குடிமக்களும் இவ்வுலகில் உள்ளனர் !
மறை நூல்கள் எடுத்தோதும் சிறந்த வாழ்வியல் கருத்துகளை உள்வாங்கி
உருவான பாடல்களும் இவ்வுலகில் உள்ளன !
அதுபோல், உயிரினங்களின்
நல்வாழ்வுக்காக நடத்தப்பெறும் வேள்விகளுக்கு நிகரான ஈகைகளும் இவ்வுலகில் உள்ளன !
------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
---------------------------
யாறு = ஆற்று வெள்ளம் ; உள் அடங்கும் = தம்முட்
புகுந்து அடங்கத் தக்க
; குளம் உள = குளங்களும் நாட்டில் உள்ளன ; வீறு
சால் = சிறப்பு அமைந்த ; மன்னர்
விழையும் = அரசர்களால் விரும்பப்படும் ; குடி
உள = குடி மக்களும் உள்ளனர் ; தொல் மரபின் = பழைய முறைமையினை உடைய ; வேதம்
உறுவன = வேதக்
கருத்துகளை பொருந்துவவாகி ; பாட்டு உள = சில தனிப்பாட்டுகளும் உள்ளன ; வேள்வியோடு
ஒப்ப = வேள்விகளுக்கு நிகரானவாகிய ; வேளாண்மை
உள = ஈகைகளும் உள்ளன.
------------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
-------------------------------
ஆறுகள் தம்முள் அடங்கத்தக்க அளவுக்குப் பெரிய குளங்களும்
உள்ளன; அரசரால் விரும்பப்படும் குடிகளும் உள்ளன ; வேதக்
கருத்துகளையுடைய தனிப்பாடல்களும் உள்ளன. அதுபோல் வேள்விக்கு நிகரான
ஈகைகளும் உள்ளன.
------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”நான்மணிக்கடிகை” வலைப்பூ.
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),14]
{30-11-2021}
------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக